Published : 10 Jan 2015 10:37 AM
Last Updated : 10 Jan 2015 10:37 AM

உலகில் வெறுப்புதான் கொடிய நோய்: கோவையில் மாதா அமிர்தானந்தமயி சொற்பொழிவு

உலகில் கொடிய நோய் என்பது வைரஸ் கிடையாது; வெறுப்புதான் கொடிய நோய் என மாதா அமிர்தானந்தமயி தெரிவித்தார்.

கோவை நல்லாம்பாளையத்தில் உள்ள மாதா அமிர்தானந்தமயி மடத்தில் அமிர்தானந்தமாயி பங்கேற்ற சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில், அவர் பேசியதாவது:

உலகில் பயங்கரவாதம் அதிகரித்துவிட்டது. யார் உயிருக்கும் யாரும் உத்தரவாதம் தர முடியாது. மனித குலத்துக்குள் ஏற்பட்டுள்ள சுயநலம் மற்றும் தன்னலப் போக்குதான் இதற்குக் காரணம். மகிழ்வாக வாழ சுயநலம் இல்லாமல் வாழ வேண்டும்.

இன்றைய போக்கில் குடும்ப வாழ்க்கை என்பது பொருளாதாரம் சார்ந்து போய்க்கொண்டிருக்கிறது. குடும்ப உறவுகளுக்குள் இருக்க வேண்டிய அன்பு, பண்பு, பாசம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை குறைந்துவிட்டது. இதனால், பிரிவுகளும் அதிகரித்துவிட்டன.

உலகில் கொடிய நோய் வைரஸ் என்கிறார்கள். ஆனால், கொடிய நோய் என்றால் வெறுப்புதான். இந்த சமூகத்தில் நன்மை, தீமை என இரண்டும் இருக்கிறது. அதில், நாம் நன்மையை எடுத்துக் கொள்ள வேண்டும். தீமையை வெளியே விட்டுவிட வேண்டும். நாட்டை குப்பை இல்லாத நாடாக மாற்றுவோம். எழுத்தறிவு மிகுந்த சமூகமாக மாற்றுவோம்.

இணையம் போன்ற நவீன முறைகள் தேவைதான். அதில் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்வோம். தீமையான விஷயங்களை புறந் தள்ளுவோம். நமது குழந்தைகளை கெட்டவற்றில் இருந்து ஒதுக்கி வைப்போம்.

பழங்குடியின மக்கள் எவ்வாறு மரங்களை மதித்து வணங் குகிறார்களோ அதேபோல் நாமும் மரங்களை மதித்துப் போற்ற வேண்டும். இருள் என்பது தீமையைப் போன்று உணரப்படுகிறது. அதில் ஒளிக்கீற்று செல்லும்போது எவ்வாறு வெளிச்சம் ஏற்படுத்து கிறதோ அதுதான் நன்மை. நன்மை மூலமாக தீமையை ஒழிக்க முடியம்.

கலாச்சாரம், பண்பாடு ஒட்டி செய்யும் செயல்கள் அனைத்தும் அர்த்தம் மிக்கவை. அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நிகழ்கால நிமிடங்களை நல்ல முறையில் அமைத்துக் கொண்டால் வாழ்க்கை மகிழ்வாக இருக்கும். சொர்க்கம் என்பது நாம் வாழும் வாழ்க்கையில்தான் உள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x