Published : 03 Jan 2015 10:22 AM
Last Updated : 03 Jan 2015 10:22 AM
நாகர்கோவிலில் பாஜக பிரமுகர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை தெருவில் தேடவேண்டியுள்ளது என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கன்னியாகுமரி மாவட்ட பாஜக வர்த்தக அணித் தலைவர் முத்துராமன் மீது நாகர்கோவிலில் பட்டப்பகலில் சிலர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் பாஜகவினர், பிற இந்து அமைப்பினர் மீது இத்தகைய தாக்குதல்கள் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டு வருகிறது.
இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டிய தமிழக அரசும், காவல் துறையும் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக உள்ளன. இத்தகைய தாக்குதல்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டாலும், தாக்கியவர்கள், கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், வழக்குகளை திசை திருப்பும் முயற்சியே நடக்கிறது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை தெருக்களில்தான் தேடவேண்டியுள்ளது. நாகர்கோவிலில் பாஜக பிரமுகர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் உடனே கைது செய்யவேண்டும். இல்லாவிட்டால் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.
இவ்வாறு தமிழிசை கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT