Published : 10 Jan 2015 11:04 AM
Last Updated : 10 Jan 2015 11:04 AM

மின்கட்டண உயர்வு ரத்து கோரி மார்க்சிஸ்ட் வழக்கு: விசாரணை 12-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

தமிழகத்தில் மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை 12-ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு விவரம்:

மின்சார சட்டம் 2003 விதி களுக்கு முரணாக தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது. இது, பொதுமக்கள் நலனுக்கு எதிரானது ஆகும். தாமாகவே மின்கட்டணத்தை திருத்தி அமைக்கும் அதிகாரம் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு உள்ளது.

மின்கட்டண உயர்வு தொடர் பாக நடத்தப்பட்ட பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில், என்ன காரணத்துக்காக கட்டணம் உயர்த்தப்படுகிறது என்ற காரணம் தெரிவிக்கப்படவில்லை.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் வரவு, செலவு அடிப்படையிலேயே மின்கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும். ஆனால், தனிப்பட்ட சிலரின் லாபத்துக்காக அதிக விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்காக 70 சதவீத வருவாய் செலவிடப்படுகிறது. மின்கட்டண உயர்வால் 2.65 கோடி நுகர்வோர் பாதிக்கப்படுவார்கள். எனவே, தன்னிச்சையாக உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் நேற்று இந்த மனுவை பரிசீலித்து விசாரணையை 12-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x