Published : 27 Apr 2014 10:00 AM
Last Updated : 27 Apr 2014 10:00 AM

கோடநாடு வரும் ஜெயலலிதாவுக்கு வரவேற்பு அளிப்பதில் கட்சியினர் குழப்பம்: தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரிக்கை

தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று கோடநாடு வருகிறார். தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளதால் முதல்வருக்கு வழக்கமாக வழங்கப்படும் உற்சாக வரவேற்பு அளிக்க முடியுமா என தொண்டர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்காக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக முதல்வர் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். தேர்தல் முடிவடைந்த நிலையில் வெள்ளிக்கிழமை தலைமைச் செயலகம் சென்றார். இதையடுத்து, இன்று அவர் கோடநாடு வருகிறார்.

கடந்த டிசம்பர் மாதம் 24-ம் தேதி கோடநாடு வந்தார். அன்றைய தினம் எம்.ஜி.ஆரின் நினைவு நாள் என்பதால் எந்தவிதமான ஆரவாரமும் இல்லாமல் முதல்வரை கட்சியினர் வரவேற்றனர். சுமார் ஒரு மாத காலம் கோடநாட்டில் தங்கியிருந்து அலுவல்களை கவனித்த முதல்வர், ஜனவரி மாதம் 25-ம் தேதி சென்னை புறப்பட்டுச் சென்றார். பின்னர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர் தற்போது 3 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இன்று கோடநாடு வருகிறார்.

சென்னையிலிருந்து கோவைக்கு விமானம் மூலம் வரும் முதல்வர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் மதியம் சுமார் 1 மணியளவில் கோடநாடு வருகிறார்.

உற்சாகம் இழந்த தொண்டர்கள்

இந்த முறை தேர்தல் முடிவடைந்து முதல்வர் வருவதால் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க அ.தி.மு.க-வினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால், தேர்தல் ஆணைய விதிகள் இதற்கு முட்டுக்கட்டையாக உள்ளன. முதல்வர் கோடநாட்டுக்கு வரும்போதெல்லாம் கட்-அவுட், போஸ்டர், ஆடல்-பாடல், வெடி வெடித்து அமர்க்களப்படுத்தும் அ.தி.மு.க-வினர், தற்போது தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளதால் முன்பு போல ஆரவாரமாக வரவேற்பு கொடுக்க முடியுமா என குழப்பம் அடைந்துள்ளனர்.

வரவேற்புச் செலவுகள் வேட்பாளரின் கணக்கில் வருமோ என்ற சந்தேகத்தில் உள்ளனர். முதல்வரை வரவேற்க தட்டி மற்றும் போஸ்டர் ஒட்ட தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரியுள்ளனர். கோடநாடு வரும் முதல்வர் தேர்தல் முடிவுகள் வரை இங்கு தங்கியிருப்பார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x