Published : 04 Dec 2014 08:38 AM
Last Updated : 04 Dec 2014 08:38 AM

மதுவிடம் இருந்து மக்களை காப்பாற்ற பூரண மதுவிலக்கு பற்றி ஏன் பரிசீலிக்க கூடாது?- மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

மதுக் கொடுமையில் இருந்து மக்களை பாதுகாக்க பூரண மதுவிலக்கு கொண்டு வருவது குறித்து மத்திய, மாநில அரசுகள் ஏன் பரிசீலிக்கக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை அடையாறு எல்.பி. சாலையில் கடந்த 2011-ம் ஆண்டு பைக்கில் வந்த பி.ராம்குமார், பி.அருண்குமார் மீது அரசு பஸ் மோதியதில் இருவரும் உயிரிழந்தனர். பிரேதப் பரிசோதனையில் இருவரும் மது அருந்தியிருந்தது தெரியவந்தது. மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயம், இந்த வழக்கை விசாரித்து அருண்குமார் குடும்பத்தினருக்கு ரூ.9 லட்சத்து 25 ஆயிரத்து 720-ம், ராம்குமார் குடும்பத்தி னருக்கு ரூ.11 லட்சத்து 34 ஆயிரத்து 67-ம் வழங்க உத்தரவிட்டது. இந்த நிவாரணத்தில் திருப்தியடையாத இரண்டு குடும்பத்தினரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன், இந்த வழக்கை விசாரித்து நேற்று பிறப்பித்த இடைக்கால உத்தரவு வருமாறு:

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறையாக இருக்கிறது. ஆனால், மூலை முடுக்கெல்லாம் மதுபானம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் பல குடும்பங்கள் மூழ்குகின்றன. சமூகத்துக்கு மதுபானம் விஷமாக இருக்கிறது. பல்வேறு சமூக தீங்குக்கு மதுபானம்தான் அடிப்படைக் காரணம். இருந்தாலும், வருவாய் ஈட்டும் நோக்கில் மதுபானக் கடைகளையும், பார்களையும் அரசே திறந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் 6,850 டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால், ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மக்கள் இறக்கின்றனர். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் வாகன எண்ணிக்கை 62 லட்சத்து 9 ஆயிரத்து 37-ல் இருந்து 1 கோடியே 82 லட்சத்து 86 ஆயிரத்து 774 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதால் இறந்த வர்கள் எண்ணிக்கையும் அதிகரித் துள்ளது. மத்திய சாலைப் போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை புள்ளிவிவரப்படி, தமிழகத்தில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதால் 2011-ம் ஆண்டு 200 பேரும் 2013-ல் 718 பேரும் இறந்துள்ளனர்.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக 2011-ம் ஆண்டு 3,564 பேரின் ஓட்டுநர் உரிமம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது. 238 பேரின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. 2013-ம் ஆண்டு 12,657 பேரின் ஓட்டுநர் உரிமம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது. 1,568 பேரின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதைக் கொண்டு பார்க்கும்போது, மத்திய அமைச்சக செயலாளர், தமிழக வருவாய்த் துறை செயலாளர், டாஸ்மாக் நிர்வாக இயக்குநர், தமிழக காவல்துறை தலைவர் ஆகியோரை இந்த வழக்கில் சேர்க்க வேண்டியுள்ளது. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இவர்கள் (எதிர்மனுதாரர்கள்) கீழ்க்கண்ட கேள்விகளுக்கு வரும் 11-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும்.

*குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை மோட்டார் வாகனங்கள் சட்டம் தடை செய்கிறது. அப்படி இருக்கும்போது மாநில அரசே மதுக்கடைகளை திறக்கலாமா?

*பூரண மதுவிலக்கு கொண்டு வருவது பற்றி மத்திய, மாநில அரசுகள் ஏன் பரிசீலிக்கக்கூடாது?

*மதுவிலக்கை அமல்படுத்தி, மாற்று வழியில் வருவாய் திரட்டுவது குறித்து அரசு ஏன் ஆராயக்கூடாது?

*மது குடிப்பதால் ஏற்படும் குற்றங்கள், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் விளையும் குற்றங்கள் குறித்த விவரங்களை அவ்வப்போது சேகரித்து, சிறந்த மேலாண்மைக்காக புள்ளி விவரங் களாக வைக்கப்பட்டுள்ளதா?

*இளைஞர்கள் குடிப்பழக் கத்துக்கு அடிமையாகின்றனர். எனவே, மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளிகளில் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டியது அவசியம் இல்லையா?

*சாலை விபத்துகளைத் தடுக்க பார்களையாவது ஏன் மூடக்கூடாது?

*குடித்துவிட்டு வாகனம் ஓட்டு பவர்களை ஜாமீனில் வெளியே வராத குற்றமாகக் கருதி, மத்திய அரசு ஏன் சட்டத்திருத்தம் கொண்டு வரக்கூடாது?

*நெடுஞ்சாலையில் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதைத் தடுக்க நடமாடும் பரிசோதனைக்கூடம், நடமாடும் நீதிமன்றம் ஏன் ஏற்படுத்தக்கூடாது?

*குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை ஏன் காவல்துறையினர் கைது செய்யக்கூடாது?

*இடைக்கால நிவாரணமாக மதுக்கடைகள் மற்றும் பார்களை 12 மணி நேரத்துக்குப் பதிலாக (காலை 10 முதல் இரவு 10 மணி வரை), எட்டு மணி நேரம் (பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை) மட்டும் திறந்துவைக்க ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது?

இவ்வாறு கேள்விகள் எழுப்பிய நீதிபதி கிருபாகரன், வழக்கு விசாரணையை 11-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x