Published : 20 Dec 2014 10:03 AM
Last Updated : 20 Dec 2014 10:03 AM
மாநிலங்களின் வருவாய் இழப்பு குறித்த அச்சத்தைத் தீர்க்கும் வரை, சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான திருத்த மசோதாவை கொண்டு வரக்கூடாது என்று மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதம் வருமாறு: மத்திய அரசால் உத்தேசிக்கப்பட்டுள்ள சரக்குகள் மற்றும் சேவை வரி தொடர்பாக, தமிழகம் போன்ற உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் மாநிலங்களுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும். இந்தச் சட்டத்திருத்தத்தை அறி முகப்படுத்தும் முன், மாநிலங்களின் ஆலோசனைகளை கேட்பதுடன், அதனை செயல்படுத்தும் முறைகள் குறித்தும் ஆலோசனைகள் நடத்த வேண்டும்.
இந்த மசோதாவால், மாநில அரசுகளுக்கு ஏற்படும் இழப்பீட்டுக்குரிய நிவாரணம் குறித்து விளக்கப்பட்டிருந்தாலும், மேலும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியுள்ளது. அதற்கு முன்பு சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான சட்டத்திருத்தத்தை, மாநில அரசுகள் மீது, மத்திய அரசு திணிக்க முயற்சிப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
இந்த மசோதாவை அறிமுகப்படுத்துவதால் ஏற்படும் வருவாய் இழப்பு, இரட்டை நிர்வாகக் கட்டுப்பாடு ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சிலை தன்னார்வ அதிகாரம் கொண்ட அமைப்பாக மாற்றுவதற்கும், இந்த பிரச்சினையில் மத்திய அரசு மேற்கொள்ளும் சட்ட விதிமுறைகளுக்கும் தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
பெட்ரோலிய பொருட்களின் மீதான வரி மற்றும் விற்பனை நிலையங்களில் வசூலிக்கப்படும் வரி ஆகியவற்றை சரக்கு மற்றும் சேவைகள் வரியின் கீழ் கொண்டுவந்தால், மாநிலங்களுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும்.
புகையிலைப் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்க சட்டத் திருத்த மசோதாவில் வழிவகை செய்யப்படவில்லை. மத்திய அரசுக்குள்ள உரிமையை போல, புகையிலை பொருட்கள் மீது கூடு தல் வரி விதிக்க, மாநில அரசுகளுக் கும் உரிமை வழங்க வேண்டும்.
சரக்கு மற்றும் சேவை வரி அமைப்பின் பரிந்துரையின் பேரில், மாநில அரசுகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் கால அளவை ஐந்து ஆண்டுகளாக, நீட்டிக்க நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டுவரப்படவுள்ளது. முதல் மூன்றாண்டுகளுக்கு 100 சதவீத இழப்பீடும், நான்காவது ஆண்டில் 75 சதவீதமும், ஐந்தாவது ஆண்டில் 50 சதவீதமும் வழங்கப்படும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இதுதொடர்பாக மாநிலத்துக்கு ஏற்படும் இழப்பீட்டை ஐந்து ஆண்டுகளில் 100 சதவீதம் முழுமையாக வழங்க வேண்டும்.
குறிப்பிட்ட வரிவிதிப்பு காலத் தில் மாநிலத்திலுள்ள வணிகர் களிடமிருந்து வசூலிக்கப்படும் ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியில், நான்கு சதவீதத்தை பிடித்தம் செய்துகொள்ள மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்.
இந்தச்சூழலில், சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு தொடர்பாக, மாநிலங்களிடையே கலந்து பேசி கருத்தொற்றுமை ஏற்படும் முன், சட்டத்திருத்த மசோதா கொண்டு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்குப் பதிலாக சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றும் முன்பு, மாநில நிதியமைச்சர்களை அழைத்து ஆலோசனை நடத்தி கருத்தொற்றுமை காண வேண்டும்.
புதிய மசோதா நிறைவேற்றப் படுவதால், மாநிலங்களின் நிதி தன்னாட்சியையும், நீண்டகால வருவாய் இழப்பையும் கருத்தில் கொண்டு, மாநிலங்களின் அச்சத்தை போக்கிய பின்னர், சட்ட திருத்த மசோதாவை கொண்டுவர வேண்டும். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT