Published : 20 Dec 2014 10:17 AM
Last Updated : 20 Dec 2014 10:17 AM
இணையதள குற்றங்களுக்கு எதிரான சட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மற்றும் தேசிய இணைய பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடுகள் அமைப்பின் தலைவர் எஸ்.மோகன் கூறியுள்ளார்.
இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு எஸ்.மோகன் பேசியதாவது:
தீவிரவாதத்தை விட மோசமானது இணைய குற்றங்கள். ஆனால் அதற்கு எதிரான வலுவான சட்டங்கள் நம்மிடம் இல்லை. சில சமயங்களில் இதுபோன்ற குற்றங்களை கையாளும்போது உச்ச நீதிமன்றமே திகைத்து நிற்கிறது. ஆபாச படங்களை வளர்ந்த நாடுகள் தடை செய்துள்ளன. ஆனால், இந்தியாவில் அதை தடை செய்யும் சட்டங்கள் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
தேசிய இணைய பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடுகள் அமைப்பின் கூடுதல் பொது இயக்குநர் எஸ்.அமர் பிரசாத் ரெட்டி பேசும்போது, “பேஸ்புக்கில் நடக்கும் குற்றங்கள் குறித்து புகார் தெரிவிக்க பேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும். அமெரிக்காவில் பேஸ்புக்கில் ஒருவரை தடை செய்ய இரண்டு நிமிடங்கள் போதும். ஆனால் இந்தியாவில் புகார்களை கவனிக்க பல மாதங்கள் ஆகின்றன. இணையத்தில் பாதுகாப்பாக இருக்க மாணவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று பள்ளிகள் கற்று தர வேண்டும். அறிமுகம் இல்லாத வேலை வாய்ப்பு மற்றும் விளையாட்டு இணையதளங்களில் விண்ணப்பிப்பதை தவிர்க்க வேண்டும்” என்றார்.
திரைப்பட இயக்குநர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பேசும்போது, “சமூகத்தில் பெண்களுக்கான மரியாதை குறைந்து வருகிறது. அதே நேரம் அவர்களுக்கு எதிரான இணையதள குற்றங்கள் அதிகரித்துள்ளன. தங்களை சுற்றியுள்ள பெண்களை மதிக்க ஆண்கள் கற்றுக் கொள்ள வேண்டும்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் செட்டிநாடு வித்யாஷ்ரம் குழுமத்தின் செயலாளர் குமாரராணி டாக்டர் மீனா முத்தையா, பள்ளியின் தலைமையாசிரியர் அமுதலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு போஸ்டர்கள் இந்நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT