Published : 19 Dec 2014 10:41 AM
Last Updated : 19 Dec 2014 10:41 AM
தமிழக மின் நிலையங்களில் அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறு மற்றும் பழுது ஏற்படுவதால் மாதக்கணக்கில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின் வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடசென்னை, எண்ணூர், வள்ளூர், கல்பாக்கம், நெய்வேலி, மேட்டூர், தூத்துக்குடி, கூடங்குளம் உள்ளிட்ட பகுதி களிலுள்ள அனல் மற்றும் அணு மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம் மற்றும் நீர், காற்றாலை மின்சாரங்கள் மூலம் மின் விநியோகம் செய்யப்படுகிறது.
மத்திய, மாநில அரசுகளின் மின் நிலையங்களில் அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி நிறுத்தப்படுவது வழக்கமாக உள்ளது.
ஆனால், தமிழக மின்வாரியம் கொள்முதல் செய்யும் மின் நிலையங்களான பி.பி.என்., மதுரை பவர் கார்ப்பரேஷன், ஜி.எம்.ஆர்., சாமல்பட்டி மின் நிலையம் போன்றவற்றில் தட்டுப்பாடின்றி, தேவைக்கேற்ப மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
வடசென்னை விரிவாக்க நிலையத் தின் முதல் அலகில் கடந்த நவம்பர் 7-ம் தேதி திடீர் தீ விபத்து ஏற்பட்டது. பாய்லர் மற்றும் டர்பைனில் பெரும் பாதிப்பு ஏற்பட்டதால், 600 மெகாவாட் மின் உற்பத்தி திடீரென நிறுத்தப்பட்டது. பெரிய பாதிப்பில்லை என்றும் விரைவில் மின் உற்பத்தி தொடங்கிவிடும் என்றும் மின் வாரியம் தெரிவித்தது.
ஆனால், ஒரு மாதத்துக்கு மேலாகியும் பழுதை சரிசெய்ய முடியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர். நேற்று பகல் நிலவரப்படி, இந்த அலகில் மின் உற்பத்தி தொடங்கப்படவில்லை. எண்ணூர் மின் நிலையத்தின் இரண்டாம் அலகில் (60 மெ.வா) கடந்த 9 மாதங்களாகவும், மூன்றாம் அலகில் (110 மெ.வா) ஒரு மாதமாகவும், 4-ம் அலகில் (110 மெ.வா) இரண்டு மாதங்களாகவும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, பழுது பார்ப்புப் பணிகள் நடக்கின்றன. 210 மெகாவாட் திறன்கொண்ட தூத்துக்குடி அனல் மின் நிலைய 3-ம் அலகு, பராமரிப்புப் பணிக்காக கடந்த 14-ம் தேதி முதல் மூடப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு மின்சாரம் தரும் மத்திய மின் நிலையங்களிலும் இதே நிலைதான். வள்ளூர் மின் நிலையத்தின் முதல் அலகில் கடந்த ஒரு வாரமாக கொதிகலன் மற்றும் மின் சுழலிக்கு செல்லும் குழாயில் நீர்க்கசிவு ஏற்பட்டு, 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. நெய்வேலியில் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலைகளில் மொத்தம் நான்கு அலகுகளில் பராமரிப்புப் பணியால் 680 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், தமிழக மின் வாரியத்துக்கு தற்போது சுமார் 2 ஆயிரம் மெகாவாட் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 40 சதவீத மின் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மின் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தற்போது காற்றாலைகளில் இருந்து 800 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் கிடைத்து வருகிறது. நீர் மின் நிலையங்களிலும் மின் உற்பத்தி வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது. அதேநேரம் தென் மாவட்டங்களில் மழை மற்றும் தமிழகம் முழுவதும் பனிக்காலமாக உள்ளதால், மின் சாதனப் பயன்பாடு குறைந்து, மின் தேவையும் குறைந்துள்ளது. எனவே, குறைந்த மின் வெட்டு மூலம் நிலைமையை சமாளித்து வருகிறோம்.
இன்று (வியாழக்கிழமை) காலை நிலவரப்படி, தமிழகம் முழு வதும் சுமார் 11,150 மெகாவாட் உற்பத்தியாகி, 237.70 மில்லியன் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பாய்லர் டியூப் பஞ்சர் என்ற பெயரில் அதிக நிதிச்செலவு:
தமிழக மின் நிலையங்கள் ஒழுங்காக இயங்கிக் கொண்டிருந்தாலும், அவ்வப்போது பாய்லர் டியூப் பஞ்சர் என்ற பெயரில், சில அலகுகளில் குறைந்தது 6 மணி நேரம் முதல் அதிகபட்சம் 2 நாட்கள் வரை உற்பத்தி நிறுத்தப்படுகிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் தமிழக மின் வாரியம் சுமார் 3,800 கோடி ரூபாயை மின் நிலைய பழுதுபார்ப்புக்கு செலவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவற்றில் பெரும்பாலான நிதி, பாய்லர் டியூப் பஞ்சர் என்ற கொதிகலன் கோளாறுக்கு செலவிடப்படுகிறது. கொதிகலன் கோளாறு அடிக்கடி நிகழ்வதால், அதுபற்றி அதிகாரிகள் திடீர் ஆய்வு அல்லது தணிக்கை செய்து சோதனை நடத்த வேண்டும் என்று மின் நிலைய ஊழியர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT