Published : 28 Dec 2014 11:48 AM
Last Updated : 28 Dec 2014 11:48 AM
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஒருநாள் முன்னதாக ஞாயிற்றுக்கிழமையே வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியதால், தமிழகம் முழுவதும் பரவலாக பஸ் சேவை முடங்கியது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த வலியுறுத்தி தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, தேமுதிக, பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் உட்பட மொத்தம் 11 தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இதற்கிடையே, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.1000 இடைக்கால நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். இதை ஏற்க மறுத்த தொழிற்சங்கங்கள், 29-ம் தேதி (நாளை) முதல் தொடர் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தன.
இந்நிலையில், நேற்று முன்தினம் தொழிலாளர் நலத்துறை ஆணையரகம் திடீரென பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. தொழிற்சங்க நிர்வாகிகள் நேரில் சென்று கோரிக்கைகளை முன்வைத்தனர். இதைத் தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நேற்று மதியம் 1.30 முதல் பிற்பகல் 3.15 மணி வரை நடந்தது.
தொழிலாளர் நல வாரிய சிறப்பு துணை ஆணையர் யாஸ்பின் பேகம் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் போக்குவரத்துத் துறை நிர்வாகம் தரப்பில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் ஆல்பர்ட் தினகரன், சேலம் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் சவுந்தரராஜன் உள்ளிட்ட அதிகாரிகளும், தொழிற்சங்கங்கள் தரப்பில் மு.சண்முகம், நடராஜன் (தொமுச), சவுந்தரராஜன் எம்எல்ஏ (சிஐடியு), ஆறுமுகநயினார் (சிஐடியு), லட்சுமணன் (ஏஐடியுசி), கஜேந்திரன் (ஏஐடியுசி) உட்பட 11 தொழிற்சங்கங்களின் நிர்வாகி களாக 25 பேர் கலந்துகொண்டனர்.
போக்குவரத்து ஊழியர்களின் புதிய ஊதிய ஒப்பந்த காலத்தை 3 ஆண்டுகளாக மாற்றுவது, ஓய்வூதிய பலன்களை வழங்குவது, போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீதான நடவடிக்கை வாபஸ், டிஏ வழங்குவது தொடர்பாக அரசாணை வெளியிடுவது, பணி நிரந்தரம் செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அரசு தரப்பில் ஏற்கப்பட்டன. ஆனால், புதிய ஊதிய ஒப்பந்தம் மேற்கொள்ள தனி கமிட்டி உடனே அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையில் இழுபறி நீடித்தது. இதனால், பேச்சுவார்த்தையில் இருந்து தொழிற்சங்கங்கள் வெளிநடப்பு செய்தன.
முன்கூட்டியே தொடங்கியது வேலைநிறுத்தம்
திங்கள்கிழமை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம், திடீரென ஒருநாள் முன்னதாக ஞாயிற்றுக்கிழமை காலையே தொடங்கியதால் மாநிலம் முழுவதும் அரசு பஸ் சேவை முடங்கியது. இதனால், மக்கள் கடும் அவதிப்பட்டனர்.
கடந்த 15 மாதங்களாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தன. இந்நிலையில், விடுப்பில் சென்றவர்களுக்கு இந்த மாதம் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஓட்டுநர், நடத்துநர்களுக்கு 5 முதல் 8 நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவல் தொழிலாளர்கள் மத்தியில் பரவியதும், நேற்று அதிகாலையிலேயே பஸ்களை எடுக்காமல் திடீரென வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
அதிகாலையில் பணிமனைகளில் இருந்து கணிசமான அளவுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. அதற்கு மற்ற தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் மறியலில் ஈடுபட்டனர். பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதையடுத்து, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டன.
மொத்தமுள்ள 23 ஆயிரம் அரசு பஸ்களில் சுமார் 80 சதவீதம், பணிமனைகளிலேயே நிறுத்தப்பட்டிருந்தன. சென்னையில் உள்ள 3,565 மாநகர பஸ்களில் 90 சதவீத பஸ்கள் ஓடவில்லை. அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள் மட்டும் பேருந்துகளை இயக்கினர்.
இதனால் பஸ் நிறுத்தங்களில் காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் கடும் அவதிப்பட்டனர். நீண்டநேரமாக பஸ்கள் வராததால் ஆட்டோ, ஷேர் ஆட்டோ, கால்டாக்ஸி மற்றும் மின்சார ரயில்களில் வீடு, அலுவலகங்களுக்கு சென்றனர். வெளியூருக்கு செல்ல வந்தோரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
மற்ற மாவட்டங்களில் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டாலும், கணிசமான அளவுக்கு தனியார் பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் ஓரளவு சிரமமின்றி பயணம் செய்தனர். சென்னையில் தனியார் பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மக்கள் கடும் அவதிப்பட்டனர்.
பஸ்கள் இயக்கப்படாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தனர். ரூ.100 முதல் ரூ.400 வரை கட்டணம் கொடுத்து ஆட்டோக்களில் சென்றனர். ஷேர் ஆட்டோக்களாக இயக்கப்பட்டு வந்த டாடாமேஜிக், அபே போன்ற ஆட்டோக்கள் ரூ.500 என வாடகைக்கு பேரம் பேசி ஓட்டிச் சென்றனர். இதனால், ஒட்டுமொத்த மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை
இதனிடையே, ஊதிய உயர்வு குறித்து அமைச்சர் தலைமையில் பேச்சுவார்த்தை தொடங்காவிட்டால் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என்று அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
போக்குவரத்துத் துறை அமைச்சர், செயலாளர் ஆகியோர் தலைமையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடரும் என்று அவர்கள் அறிவித்தனர்.
முன்னதாக, ''போக்குவரத்து தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன. புதிய ஒப்பந்தம் ஏற்படுத்துவதில் சில பிரச்சினைகள் உள்ளன. நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருவதால், சட்டச் சிக்கல் இருக்கிறது.
மற்ற தொழிற்சங்கங்களுடன் தொமுசவும் இணைந்து பேசுவதால், எந்த பிரச்சினையும் இல்லை என உயர் நீதிமன்றத்தில் மனு செய்ய வேண்டும். அதன்பின்னர், நீதிமன்றம் உத்தரவிட்டால்தான் முறையாக பேச்சுவார்த்தை நடத்த முடியும். எனவே, இது தொடர்பாக அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வரும் 30-ம் தேதி நடத்தப்பட உள்ளது'' என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT