Last Updated : 17 Dec, 2014 02:04 PM

 

Published : 17 Dec 2014 02:04 PM
Last Updated : 17 Dec 2014 02:04 PM

10.34 லட்சம் வீடுகளுக்கு மின் கட்டண உயர்வால் பாதிப்பு

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வால் பாதிக்கப்படும் வீட்டு மின் இணைப்புகளின் எண்ணிக்கை 10.34 லட்சம் என்று தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 12-ம் தேதி யில் இருந்து 15 சதவீத மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதில், 2 மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கான கட்டண உயர்வை அரசே ஏற்கும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஒரு கோடியே 71 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் உள்ளன. இதுதவிர குடிசை இணைப்புகள் - 11.83 லட்சம், தெருவிளக்கு மற்றும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் – 5.82 லட்சம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் – 71 ஆயிரம், தனியார் கல்வி நிறுவனங்கள் – 17 ஆயிரம், விசைத்தறி நெசவாளர்கள் – 1.3 லட்சம், குடிசை மற்றும் சிறுதொழில் நிறுவனங்கள்- 1.02 லட்சம், விவசாய மின் இணைப்பு – 20.47 லட்சம், கோயில்கள் – 89 ஆயிரம் என மொத்தம் 2.45 கோடி மின் நுகர்வோர் உள்ளனர். மேலும், 8 ஆயிரம் உயர் மின்னழுத்த நிறுவன நுகர்வோரும் உள்ளனர்.

இதில், 11.83 லட்சம் குடிசை மின் இணைப்புகளுக்கு கட்டணம் கிடையாது. கைத்தறி நெசவாளர் களுக்கு 100 யூனிட் வரை கட்டணம் இல்லை. அதற்குமேல், வீட்டு மின் உபயோகிப்பாளர்களுக்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 2 மாதத்துக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் விசைத்தறி மின் நுகர்வோருக்கு கட்டணம் இல்லை. அதற்கு மேல் பயன்படுத்தினால் வீட்டு மின் கட்டணம் வசூலிக்கப்படும்.

வீடுகளைப் பொறுத்தவரை, 2 மாதங்களுக்கு 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு யூனிட்டுக்கு 85 பைசா அதிகரிக்கப்பட்டு ரூ.6.60 ஆக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 1.71 கோடி இணைப்புகளில், 10.34 லட்சம் வீடுகளில் மட்டுமே சராசரியாக 2 மாதங்களுக்கு 500 யூனிட்டுக்கு அதிகமாக மின்சாரம் பயன்படுத்துகின்றனர். இந்த வீடுகளுக்கு மட்டுமே மின் கட்டண உயர்வு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x