Last Updated : 10 Dec, 2014 10:27 AM

 

Published : 10 Dec 2014 10:27 AM
Last Updated : 10 Dec 2014 10:27 AM

இன்று 136-வது பிறந்த நாள்: தொரப்பள்ளியில் ராஜாஜிக்கு மணிமண்டபம் கட்டப்படுமா?

ஓசூர் அருகே ராஜாஜி பிறந்த ஊரில் அவருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தொரப்பள்ளி கிராமத்தில், கடந்த 1878-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி பிறந்தவர் மூதறிஞர் ராஜாஜி.

ஓசூர் ஆர்.வி. அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்த அவர், பின் பெங்களூருவில் உயர்கல்வி படித்து சென்னை மாநில கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தார். மகாத்மா காந்தியின் கொள்கையில் மிகுந்த ஈடுபாடு கொண்டு அவருடன் பல்வேறு சுதந்திர போராட்டங்களில் பங்கேற்றார்.

தொடக்கத்தில் சேலம் நகராட்சி கவுன்சிலராக தன்னுடைய அரசியல் வாழ்க்கையை தொடங்கிய ராஜாஜி அதன்பின் படிப்படியாக உயர்ந்து நகராட்சித் தலைவர், சென்னை முதல்வர் உள்ளிட்ட பதவிகளை அலங்கரித்தார்.

சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பதவியேற்றார். பாரத ரத்னா உள்ளிட்ட பல்வேறு உயர் விருதுகளை பெற்றுள்ளார். இவரை பெருமைப்படுத்தும் வகையில் 1978-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் எம்ஜிஆர், ஓசூர் தொரப்பள்ளியில் ராஜாஜி பிறந்த வீட்டை அரசுடமையாக்கி நினைவு இல்லமாக மாற்றினார்.

இல்லத்தில் ராஜாஜி பிறந்து வளர்ந்த விதம், அவர் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் இந்திய தலைவர்களுடன் அவர் பங்கேற்ற வரலாற்று சிறப்பு மிக்க பல்வேறு அரிய புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதைக் காண தினமும் பள்ளி மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் தவிர பல்வேறு நாடுகளிலிருந்து தொழில் நிமித்தமாக ஓசூர் வருகை தரும் வெளிநாட்டவர்களும், ராஜாஜி நினைவு இல்லத்துக்கு ஆர்வமாக வந்து செல்கின்றனர்.

மணிமண்டபம்

கடந்த அதிமுக ஆட்சியின்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, தொரப்பள்ளி அருகே நிலம் தேர்வு செய்து ராஜாஜிக்கு மணிமண்டபம் கட்ட உத்தரவிட்டார். அடுத்து வந்த திமுக ஆட்சியில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. தற்போது அதிமுக அரசு பெறுப்பேற்றது முதல் மணிமண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

தத்தெடுக்க கோரிக்கை?

நாட்டின் உயர்ந்த பதவியில் இருந்து நாட்டுக்கு சேவை ஆற்றிய ஒரு தலைவரின் ஊர் இன்றும் அடிப்படை வசதிகளை பெறாமல் குக்கிராமமாகவே உள்ளது.

தற்போது ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் ஒரு கிராமத்தைத் தத்தெடுக்க வேண்டும் என்கிற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி தொரப்பள்ளி கிராமத்தை தத்தெடுத்து நாட்டின் முன் மாதிரியான கிராமமாக உருவாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x