Published : 13 Dec 2014 10:55 AM
Last Updated : 13 Dec 2014 10:55 AM
கலைகளின் பிறப்பிடம் தமிழகம் என்பது உலகறிந்த விஷயம். அந்தக் கலைகளில் கட்டிடக்கலையும், சிற்பக் கலையும், தமிழர்களின் நாகரிகத்தையும், பண்பாட்டையும் இன்றுவரை பிரதிபலிக்கின்றன. அதற்கு சிறந்த உதாரணமாகத் திகழ்வது முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி திருஆவினன் குடி. பழநி முருகனின் ஆதிகோயிலான இந்த கோயிலை நக்கீரர் திருமுரு காற்றுப்படையில் போற்றியுள்ளார்.
இந்த கோயிலில் காணப்படும் சிற்பங்கள் 16-ம் நூற்றாண்டில் மதுரை நாயக்கர் மன்னர் காலத்தவையாகும். சேரன், செங்குட்டுவனின் தாத்தா வேலாதி கோமான் ஆட்சி செய்த பகுதி பழநி. இவர் வழியில் வந்தவர் வையாவி கோப்பெரும்பேகன். இவர் கடையெழு வள்ளல்களில் ஒருவர். ஆவியர் குலத்தலைவனாக இவரது தலைநகரம் திகழ்ந்ததால் பழநிக்கு ஆவினன்குடி என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பழநியைச் சேர்ந்த தொல்லியல் ஆராய்ச்சியாளர் நந்தி வர்மன் `தி இந்து'விடம் கூறியது:
“நாயக் கர் மன்னர்களால் திருஆவினன்குடி கோயில் எழுப்பப்பட்டு பழநி, ஆயக் குடி, நெய்க்காரப்பட்டி ஜமீன்தாரர் களால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. அகத்தியர், அவ்வையார், நக்கீரர், சிவ கண்டி, அருணகிரிநாதர், கச்சியப்பர், பொய்யாமொழிப்புலவர், முருகம்மை, மாம்பழக் கவிச்சிங்க நாவலர், பகழிக்கூத்தர், சாது சுவாமிகள், பாம்பன் சுவாமிகள், வள்ளிமலை சுவாமிகள் ஆகியோர் இத்திருத்தலத்தின் சிறப்புகளைப் பாடியுள்ளனர்.
கோயில் சிற்பங்களின் சிறப்பு
பெரிய சிற்பங்களை அமைப்பது சிற்பிகளுக்கு எளிதானது. ஆனால், சிற்பத்தின் தன்மையும், அதன் பொலிவு, சிலையின் முகபாகவங்கள் மெல்லிய, நுணுக்கமான வேலைப்பாடுகள், கண்ணிமைகள், துகில் போன்ற வேலைப்பாடுகள் கொண்ட சிற்பங் களைப்போல் இரண்டடி அகலம் கொண்ட தூண்களில் அமைப்பது சாதாரணமல்ல. இவை அத்தனையும் கொண்ட சிற்பங்கள் திருஆவினன்குடி கோயிலில் அமைந்திருப்பது காண்போரை வியக்க வைக்கிறது. கணினிமூலம் வரையப்பட்டு நெய் யப்படும் பட்டுச் சேலையின் டிசைன் களை கல்லில் வடித்திருப்பது கல்லிலே கலைவண்ணம் கண்ட தமிழர்களின் சிறப்பை அறிய முடிகிறது.
நீளம் 80 அடி, அகலம் 40 அடி கொண்ட மகாமண்டபம் என்று அழைக் கப்படும் முன் மண்டபத்தில் 12 அடி உயரமும், 8 அடி சுற்றளவும் கொண்ட பிரம்மாண்டமான கலைநுணுக்கத் துடன் கூடிய 30 தூண்கள், 8 அடி இடைவெளியில் அமைக்கப்பட்ட மண்டபத்தை தாங்கி பிடித்துள்ளன. ஒவ்வொரு தூண்களிலும் 2 அடி உயரம், 1.5 அடி அகலமுடையதாக பக்கத்துக்கு ஒன்றாக நான்கு புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சிற்ப சாத்திர விதிப்படியும், ஆகம விதிப்படியும் இந்த சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கண்முன் நிற்கும் புராணக் காட்சிகள்
புராணக் காட்சிகள், இயற்கை காட்சிகளை கண்முன் நிறுத்துவதாக இந்த சிற்பங்கள் அமைந்துள்ளன. இறைவனின் அவதாரக் காட்சிகள், சிவன், விஷ்ணு, முருகன், சூரியன், சந்திரன், காளி, சூரவர்த்தினி, மீனாட்சியம்மை போன்றவை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த சிற்பங்களில் வரையப்பட்ட பூக்கள், இலைகளை மேலோட்டமாகப் பார்த்தால் இலைகள் பூக்களாகத் தெரியும்.
பூக்கள் இலைகளாகத் தெரியும். உற்றுப்பார்த்தால் அழகிய பெண்களின் உருவங்கள் தெரிகின்றன. இந்தக் கலைக்கோயில் சிறப்புகள் உலகுக்குத் தெரியாமலே குடத்திலிட்ட விளக்காக இருப்பது என்ற நிலை மாறி குன்றிலிட்ட விளக்காக உலக மக்களுக்கெல்லாம் அறிய செய்யப்பட வேண்டும் என்பதே நமது ஆவல்” என்றார்.
கணினிமூலம் வரையப்பட்டு நெய்யப்படும் பட்டுச் சேலையின் டிசைன்களை கல்லில் வடித்திருப்பது கல்லிலே கலைவண்ணம் கண்ட தமிழர்களின் சிறப்பை அறிய முடிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT