Published : 16 Dec 2014 10:20 AM
Last Updated : 16 Dec 2014 10:20 AM
இந்தியாவில் அதிகளவில் சாப்ட்வேர் ஏற்றுமதி செய்யும் முதல் மூன்று மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக திகழ்கிறது’’ என, தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ), தமிழக அரசின் எல்காட் நிறுவனம் மற்றும் இந்திய தகவல் தொழில்நுட்ப பூங்கா (எஸ்டிபிஐ) இணைந்து ‘கனெக்ட்-2014’ என்ற பெயரில் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் குறித்து கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நேற்று சென்னையில் தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இக்கருத்தரங்கை தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் என். சுப்பிரமணியன் இருவரும் தொடங்கி வைத்தனர். கருத்தரங்கில் அமைச்சர் தங்கமணி பேசியதாவது:
ஜவுளி, தோல், ஆட்டோ மொபைல், எலக்ட்ரானிக்ஸ் ஹார்டுவேர், கிரானைட், சர்க்கரை, சாப்ட்வேர் ஆகிய துறைகளில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.
தமிழகத்தில் ஐ.டி.துறை சிறந்து விளங்கி வருகிறது. கடந்த 2004-05ம் ஆண்டில் தமிழகத்தில் 1,114 ஆக இருந்த ஐ.டி.நிறுவனங்களின் எண்ணிக்கை 2012-13ம் ஆண்டில் 1,780 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம், 3.75 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். நாட்டின் மொத்த ஐ.டி. ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு 10 சதவீத மாக உள்ளது.
அதேபோல், இந்தியாவில் அதிகளவில் சாப்ட்வேர் ஏற்றுமதி செய்யும் முதல் மூன்று மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக திகழ்கிறது.
மேலும், புதிய தொழில் கொள்கை இயற்றப்பட்டதன் மூலம், தமிழகம் முதலீடு செய்வதற்கு ஏற்ற மாநிலமாக முதலீட்டாளர்கள் மத்தியில் கருத்து ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உற்பத்தி துறையில் ஆண்டுக்கு 14 சதவீதம் வளர்ச்சி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் 2023ம் ஆண்டிற்குள் உற்பத்தி துறையில் 15 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய தமிழக அரசு தீர்மானித்துள்ளது.
தமிழகம் முழுவதும் தகவல் தொழில்நுட்ப மையங்களை ஏற்படுத்துவதற்காக, சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி மற்றும் ஒசூர் ஆகிய இடங்களில் எல்காட் நிறுவனம் மூலம் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார். இக்கருத்தரங்கில் ஐடி நிறுவனங் களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT