Published : 17 Dec 2014 10:13 AM
Last Updated : 17 Dec 2014 10:13 AM
கடந்த 19-ம் நூற்றாண்டில் சென்னையில் காலரா நோய் வேகமாகப் பரவியது. அப்போதிருந்த குடிநீர் விநியோக முறையில் திறந்தவெளிக் குழாய்கள் பயன்படுத்தப்பட்டதால் தண்ணீர் மூலமாக பரவக்கூடிய காலராவை எளிதில் கட்டுப்படுத்த முடியவில்லை.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்னர் இதே தேதியில் (டிச.17) தமிழகத்தின் முதல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த நிலையத்தை வடிவமைத்தவர் சிறப்பு பொறியாளர் ஜே.டபுள்யூ மேட்லி என்ற ஆங்கிலேயர்.
புழல் ஏரியிலிருந்து எடுத்துவரப்பட்ட நீர் முதலில் 14 அடுக்குகளாக அமைக்கப்பட்ட மித மணல் வடிகட்டி என்னும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுத்திகரிக்கப்பட்டது. பின்னர் நிலத்தடி நீர்த் தொட்டியில் சேகரிக்கப்பட்டு, நீராவியின் மூலம் இயங்கிய பம்புசெட்களின் உதவியுடன் வார்ப்பு இரும்பால் செய்யப்பட்ட குழாய்களின் வழியே விநியோகக் கட்டமைப்புக்கு மாற்றப்பட்டது.
1914-ம் ஆண்டு பொறி யாளர் மேட்லியால் அமைக்கப் பட்ட இரும்புக் குழாய்களின் வழியாகத்தான் இன்றும் நம் வீடுகளுக்கு குடிநீர் வந்து கொண்டிருக்கிறது. 1935 ஆம் ஆண்டு நீராவி நீரேற்று தொழில்நுட்பத்தை மாற்றி சென்னையின் முதல் மின் மோட்டார்கள் இந்த ஆலையில் பொருத்தப்பட்டன. “80 ஆண்டு கள் கண்ட அந்த மின் பம்புகள் இப்போது வரையிலும் 100 சதவீத செயல்திறனுடன் இயங்குகின்றன” என்கிறார் கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு ஆலையத்தின் செயற்பொறியாளர் விஜயராஜன்.
இந்த குடிநீர் விநியோகக் கட்டமைப்பு தொடர்பாக கீழ்ப் பாக்கம் நீரேற்று நிலைய செயற் பொறியாளர் விஜயராஜனிடம் பேசியபோது, “மேட்லி ஏற்படுத்திய நீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோகத் திட்டம் மிகவும் அற்புதமானது. எல்லா சூழல்களிலும் குடிநீர் விநியோகத் தில் தடை ஏற்படாத வகையில் இது ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்போதும் கூட அதில் எந்த மாற்றமும் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை” என்றார். தற்போது நூற்றாண்டு கண்டிருக்கும் இந்த சுத்திகரிப்பு நிலையத்தை புனரமைத்து, கண்காட்சி நடத்தும் ஏற்பாடுகளை சென்னை குடிநீர் வாரியம் செய்து வருகிறது. சென்னையின் அடையாளச் சின்னங்களாக பழம் பெரும் கட்டடங்களைக் குறிப்பிடுவார்கள். ஆனால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு இன்றுவரை நீர் வழங்கிவரும் கீழ்ப்பாக்கம் நீரேற்று நிலையமும் அத்தகைய அடையாளங்களில் ஒன்றாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT