Published : 15 Apr 2014 11:48 AM
Last Updated : 15 Apr 2014 11:48 AM
லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க, ஜனசக்தி என்ற புதிய இயக்கத்தை சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி திங்கள்கிழமை தொடங்கினார்.
‘ஜனசக்தி’ ஊழல் ஒழிப்பு இயக்கத்தின் தொடக்க விழா, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் திங்கள்கிழமை நடந்தது. நிறுவனத் தலைவர் டிராபிக் ராமசாமி, இயக்கத்தின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
அரசு அலுவலகங்களில் பிறப்புச் சான்றிதழ் முதல் இறப்புச் சான்றிதழ் வரை அனைத்துக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. லஞ்சம், ஊழலை ஒழிப்பதற்காக ‘ஜனசக்தி’ என்ற ஊழல் ஒழிப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. லஞ்சம் வாங்குவது யாராக இருந்தாலும் அவர் எந்த பதவியில் இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தொடரப்படும். சட்டங்கள் நன்றாகத்தான் உள்ளது. அதை பயன்படுத்தும் அதிகாரிகள்தான் சரியில்லை. நான் யாருக்கும் விலை போகமாட்டேன்.
தென்சென்னை மக்களவைத் தொகுதி யில் போட்டியிடுகிறேன். வெற்றி, தோல்வி பற்றி கவலைப்படவில்லை. அரசியல் மாற்றம் விரும்பினால், மக்கள் வாக்களிக்கட்டும். இதுவரை 525 பொதுநல வழக்குகள் தொடர்ந் துள்ளேன். இவற்றில் தமிழகத்தில் மட்டும் சுமார் 500 வழக்குகள் இருக்கும். 2008-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில், 5 ஆயிரம் நடைபாதை வியாபாரிகள் பயனடைந்தனர்.
இவ்வாறு டிராபிக் ராமசாமி கூறினார்.
பேட்டியின் போது ஜனசக்தி செயல் தலைவர் இனியன் சம்பத், பொதுச் செயலாளர் எம்.ஜெயராமன் ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT