Published : 18 Dec 2014 10:30 AM
Last Updated : 18 Dec 2014 10:30 AM
பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, 20-ம் தேதி சென்னை வருகிறார். அவரது முன்னிலையில் திமுக பிரமுகர்கள் சிலரும், முன்னாள் அரசு அதிகாரிகளும் பாஜகவில் இணைவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜக தேசிய தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறை யாக கடந்த மாதம் 7-ம் தேதி சென்னை வந்தார் அமித் ஷா. தனது சகோதரியின் கண் சிகிச்சைக் காக வந்ததால் கட்சி ரீதியான நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. அப்போது, ஆடிட்டர் குருமூர்த்தியை மட்டுமே சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்துப் பேசினார்.
இந்நிலையில், வரும் 20, 21 தேதிகளில் சென்னையில் அமித் ஷா சுற்றுப்பயணம் மேற் கொள்கிறார். அவரது வருகை குறித்து பாஜக மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:
20-ம் தேதி மாலை 3 மணியளவில் சென்னை வரும் அமித் ஷா, விமான நிலையத்திலிருந்து மறைமலைநகர் சென்று அங்கு நடக்கும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்தப் பொதுக்கூட்டம் தமிழகத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று மாநில தலைமைக்கு அவர் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார். அதனடிப் படையில், தமிழகத்தின் முக்கிய கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்களை பாஜகவில் இணைப் பதற்கான முயற்சிகள் நடக்கின்றன. உட்கட்சி தேர்தலில் அதிருப்தியில் உள்ள திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர்களை இழுக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. தென் மாவட்டத்தில் செல்வாக்குள்ள முன்னாள் எம்எல்ஏவும், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் சிலரும் பாஜகவுக்கு வர ஒப்புதல் அளித்துள்ளனர்.
மேலும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளையும் கட்சிக் குள் கொண்டுவர முயற்சிகளும் நடக்கின்றன. குறிப்பாக, சில அதிகாரிகளை அமித் ஷாவே, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறைமலை நகர் பொதுக்கூட்டத்தில் அமித் ஷா முன்னிலையில் முக்கியப் பிரமுகர்களின் இணைப்பு நடக்கும் என எதிர்பார்க்கிறோம்.
முன்னாள் அரசு அதிகாரிகளை கட்சியில் சேர்ப்பதன் மூலம், பணியிலிருந்தபோது அரசியல் தலையீட்டால் தாங்கள் சந்தித்த கசப்பான அனுபவங்களை சொல்லி திராவிட கட்சிகளை வீழ்த்த முடி யும். பொதுக்கூட்டத்துக்கு பிறகு சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கும் அமித் ஷா, அன்றிரவு சில முக்கிய பிரமுகர்களை ரகசியமாக சந்திக்கவும் திட்டம் வைத்துள்ளார். ரஜினிகாந்தை சந்திக்க அவர் ஆர்வமாக இருக்கிறார். ஆனால், ரஜினி தரப்பு இன்னும் உறுதியான பதிலை கூறவில்லை.
கமலாலயத்தில் 21-ம் தேதி மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கும் அமித் ஷா, உறுப்பினர் சேர்க்கை குறித்த பயிலரங்குகளை நடத்துகிறார். மதியம் 12 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்திக்கும் அவர், மாலை 4 மணியளவில் சென்னை கோட்ட பாஜக பொறுப்பாளர்களை சந்தித்துவிட்டு 6 மணிக்கு விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT