Published : 30 Dec 2014 08:36 AM
Last Updated : 30 Dec 2014 08:36 AM

கிரானைட் நிறுவனங்களின் மோசடிக்கு மூல காரணம் அதிகாரிகளே: சகாயத்திடம் கிராம மக்கள் குமுறல்

கிரானைட் நிறுவனங்களின் மோசடிக்கு மூல காரணமே அதிகாரிகள்தான் என்று பொதுமக்கள் சகாயத்திடம் புகார் தெரிவித்தனர்.

மதுரை மாவட்டத்தில் நடந்துள்ள கிரானைட் முறைகேடு குறித்து ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் 3-வது கட்டமாக ஆய்வு நடத்தி வருகிறார். இ.மலம்பட்டியிலுள்ள புறாக்கூடு மலைக்கு திங்கள்கிழமை சகாயம் சென்றார். கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகள், மலைகளை கிரானைட் குவாரிக்காக அழித்து சின்னாபின்ன மாக்கியதால் கிராமத்தின் அடையாளமே மாறிப்போனது சகாயத்தின் ஆய்வில் தெரிந்தது. விவசாயமே செய்ய முடியாமல் செய்து பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை பிஆர்பி நிறுவனம் வாங்கி குவித்ததாக அவரிடம் சரமாரியாக புகார்கள் தெரிவிக்கப்பட்டன.

அரசு ஆவணங்களில் 92 அடி உயரம், 200 அடி நீளத்தில் 21 ஏக்கரில் இருந்த மலை தரைமட்டமாக்கப்பட்டிருந்தது. அருகிலிருந்த குளமும் சின்னாபின்ன மாக்கப்பட்டிருந்தது. 2006-ல் பிஆர்பி நிறுவனம் டாமின் ஒப்பந்ததாரராக செயல் பட்டு 3 மாதத்தில் மலையை இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிட்டது. இம்மலையில் காஷ்மீர் ஒயிட் என்றழைக்கப்படும் விலை உயர்ந்த கிரானைட் கல் இருந்துள்ளது. இதனால் மலை மட்டுமின்றி அருகி லிருந்த குளத்தையும் ஆக்கிரமித்து பாதாளம்வரை கிரானைட்டை தோண்டி எடுத்துவிட்டிருந்ததை சகாயம் பார்வை யிட்டார்.

பட்டாவை மாற்றி மோசடி

புறாக்கூடு மலை அருகே 9.26 ஏக்கர் அரசு நிலம் இருந்துள்ளது. இங்கு கிரானைட் தோண்ட திட்டமிட்ட பிஆர்பி நிறுவனம் தங்களுக்கு வேண்டியவர்கள் பெயரில் தலா 40 சென்ட் வீதம் 23 பேருக்கு அரசு நிலத்தை பட்டா மாறுதல் செய்தனர். 40 ஆண்டுகளாக விவசாயம் செய்துவரும் இந்த நிலத்தை தங்களிடம் ஒப்படைக்க கேட்டு 2003-ல் பட்டா பெற்றுள்ளனர். பின்னர் 40 பேரும் பிஆர்பிக்கு இடத்தை விற்றுவிட்டனர். அங்கு கிரானைட் குவாரி தோண்ட முயன்றபோது எதிர்ப்பு கிளம்பியது. மறியலில் ஈடுபட்ட மக்கள் மீது போலீ ஸார் தடியடி நடத்தியதில் 25 பேர் காயமடைந்தனர். வேறு வழியில்லாத நிலையில் 2006-ல் குறிப்பிட்ட இடத்தில் பட்டாவை ஏன் ரத்து செய்யக்கூடாது எனக்கேட்டு தாலுகா அலுவலகம் நோட்டீஸ் அனுப்பியது. இதுவரை இந்த இடத்தை அரசு மீட்கவில்லை என அக்கிராமத்தை சேர்ந்த முத்தையா, மெய்யன் ஆகியோர் சகாயத்திடம் தெரி வித்தனர். குறிப்பிட்ட இடத்தை ஆய்வு செய்த சகாயம் அந்த நிலத்தில் உவர் மண் மட்டுமே இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அந்த மண் சலவை தொழிலாளர் பயன்படுத்தும் மண். இங்கு எப்படி 40 ஆண்டுகளாக விவசாயம் செய் திருக்க முடியும், என்ன பயிர், எப்போது விளைந்தது என்ற விவரத்தை தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதிகாரிகளே காரணம்

பிஆர்பி உள்ளிட்ட கிரானைட் நிறு வனங்களின் மோசடிக்கு மூல காரணமே அதிகாரிகள்தான் என மக்கள் பலரும் சகாயத்திடம் குற்றம்சாட்டினர். பணியில் இருக்கும் வருவாய்த் துறை யினர் ஆவணங்களைத் திருத்த வும், கிரானைட் கற்களை வெட்டி பதுக் கவும் துணைபோகின்றனர். பணியிலி ருந்து ஓய்வு பெற்றதும் வருவாய்த் துறை, டாமின் அதிகாரிகள் பிஆர்பி நிறுவனத் திலேயே வேலைக்கு சேர்ந்துவிடு கின்றனர். எப்படியெல்லாம் அரசு நிலத்தை மோசடி செய்யலாம் என இவர்கள் தான் பிஆர்பிக்கே யோசனை கூறு கின்றனர். அரசு நிலத்தை வளைத்து போடுவது எப்படி, அரசுக்கு தெரியாமல் மோசடியாக கிரானைட் கற்களை வெட்டி எடுப்பது எப்படி என கிரானைட் கொள்ளைக்கு அனைத்து வழிகளிலும் இந்த அதிகாரிகள்தான் உதவியுள்ளனர். 2012-ம் ஆண்டுவரை இதை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை என்றனர்.

மேலூர் தாலுகா அலுவலகத்தில் பிஆர்பி குடும்பத்தினர் பெயரில் நிலப் பட்டா மாறிவிட்டால் அதை முழுமையாக பாதுகாப்பது அதிகாரிகள்தான் என கிராமத்தினர் சரமாரியாக குற்றம் சாட்டியதை சகாயம் குறிப்பெடுத்துக் கொண்டார்.

விவசாயிகள் நிலத்தை விற்றது ஏன்?

விவசாய நிலங்களை நல்ல விலைக்குத்தானே விற்றுள்ளீர்கள்? பிறகு ஏன் புகார் அளிக்கின்றீர்கள் என பலரிடமும் சகாயம் கேள்வி எழுப்பினர். இதற்கு விவசாயிகள் சகாயத்திடம் கூறியது: நீர்நிலைகளில் கற்குவியலை கொட்டி அடைத்துவிடுவர். இதனால் தண்ணீர் வராததால் விவசாயம் செய்ய முடியாது.

பின்னர் ஒரு நிலத்தை வாங்கி அங்கே கற்களை தோண்டி பக்கத்து நிலத்தில் கொட்டுவர். நிலத்துக்கு செல்லும் பாதைகளை அடைப்பர். கேள்வி கேட்டால் மிரட்டுவர். தரிசாக போடுவதை தவிர வேறு வழியில்லை. பிஆர்பி நிறுவனத்தை தவிர வேறு யாரும் நிலத்தை வாங்க முடியாத நிலையை ஏற்படுத்தி விடுவர். விஏஓ, தலையாரிகளே பிஆர்பியின் புரோக்கர்களாக மாறி விடுவர். பட்டா புத்தகங்களை மொத்தமாக வாங்கி பத்திரம் தயாரித்து கையெழுத்து வாங்கிவிடுவர். வேறு வழியே இல்லாத நிலையில்தான் நிலத்தை விற்றுள்ளோம்.

இருந்த நிலத்தையும் இழந்து, இன்று விவசாயமே செய்ய முடியாத நிலையில், வேலையும் இல்லாமல் தவிக்கிறோம் என சகாயத்திடம் பலரும் குமுறலை வெளிப்படுத்தினர். இவர்களுக்கு சகாயம் ஆறுதல் கூறினார். சகாயம் அடுத்த வாரம் மீண்டும் ஆய்வைத் தொடர்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x