Published : 14 Dec 2014 10:51 AM
Last Updated : 14 Dec 2014 10:51 AM
கிராம ஊராட்சிகளில் செயல்படும் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் போன்றவை முறையாக வரி செலுத்தாததால் கிராம பஞ்சாயத்துகள் நிதி நெருக்கடியில் தள்ளாடுகின்றன.
தமிழகத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் 306 கிராம ஊராட்சிகள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்புவரை, கிராம பஞ்சாயத்துகளுக்கு வசூலாகும் வீட்டு வரி, தொழில் வரி, கட்டிட வரிக்கு இணையான பல்வேறு மானிய நிதி உதவிகள் வழங்கப்பட்டன. தற்போது, மக்கள் தொகை அடிப்படையில் வழங்கும் மாநில நிதிக் குழு மானியம் மட்டுமே கிராம பஞ்சாயத்துகளுக்கு வழங்கப்படுகிறது. மற்ற மானிய நிதி உதவிகள் நிறுத்தப்பட்டுவிட்டன.
அதனால், கிராம பஞ்சாயத்துகள் அந்தந்த பஞ்சாயத்துகளில் வசூலாகும் வரிவசூல் வருவாய் இனத்தை மட்டுமே நம்பி தெருவிளக்கு, குடிநீர், சுகா தாரப் பணிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்கின்றன. இந்த நிதி போதுமானதாக இல்லாததால் கிராம பஞ்சாயத்துகள் வருவாய் இல்லாமல் தற்போது நிதி நெருக்கடியில் சிரமப்படுகின்றன.
இதுகுறித்து கிராம பஞ்சாயத்து ஊராட்சி செயலர்கள் கூறியது: தமிழகத்தில் பெரும்பாலான மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், நர்சிங் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தொழிற்சாலைகள், தனியார் குடிநீர் நிறுவனங்கள் கிராம ஊராட்சி எல்லைக்குள் செயல்படு கின்றன. கட்டிட வரி, தொழில் வரி சலுகைகளுக்காக இந்நிறுவனங்கள் கிராம பஞ்சாயத்துகளில் தொழிலை ஆரம்பிக்கின்றன. ஆரம்பிக்கும்போது பஞ்சாயத்து அனுமதிக்காக இந்நிறு வனங்கள் ஒழுங்காக வரி செலுத்துகின்றன.
அரசு சலுகைகளை பெற்றுக் கொண்ட பின், இந்நிறுவனங்கள் கிராம ஊராட்சிகளுக்கு முறையாக வரி கட்டாமல் இழுத்தடிக்கின்றன. குறிப்பாக தனியார் கல்வி நிறுவனங்கள் வரி தர மறுக்கின்றனர். அவர்கள் பள்ளி, கல்லூரிகளில் ஒவ்வொரு சீட்டுக்கும் ஆயிரக்கணக்கில் பெற்றோரிடம் பணத்தை வசூல் செய்துவிட்டு அரசுக்கு வழங்க வேண்டிய நியாயமான வரியை செலுத்தாமல் இழுத்தடிக்கின்றனர். முன்பு போல் மானிய நிதி இல்லாததால் தற்போது அரசு வழங்கும் மாநில நிதிக் குழு மானியத்தை மட்டுமே வைத்துக் கொண்டு ஊராட்சிகளில் பொது மக்களுக்கு அடிப்படை பணிகளைகூட செய்து கொடுக்க முடியவில்லை. அதனால், அவர்களும் தற்போது கட்ட வேண்டிய வரிகளை தராமல் இழுத்தடிப்பதால் கிராம பஞ்சாயத்து களில் சில நேரம் ஊழியர்கள் ஊதியம்கூட பெற முடியாமல் தவிக்கின்றனர்.
அரசுக்கு சாதகமாக தீர்ப்பு
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் கோபி நாத்திடம் கேட்டபோது அவர் கூறியது:
கிராம பஞ்சாயத்துகளில் செயல்படும் கல்வி நிறுவனங்கள் வரி செலுத்த மறுத்து நாங்கள் கிராமப்புறங்களில் சேவை அடிப்படையில் செயல்படுவதாகக் கூறி வரிவிலக்கு அளிக்க வேண்டும் என நீதிமன்றங்களில் பரவலாக வழக்குகள் தொடர்ந்துள்ளன. இதில் நாமக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களில் உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் அரசுக்கு சாதகமாகத்தான் தீர்ப்பு வந்துள்ளன.
கல்லூரியில் செயல்படும் விடுதிகள் வியாபார ரீதியாகத்தான் செயல்படு வதால் அவற்றுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தொடர்ந்த வழக்குகளில்தான் இதுவரை எந்த தீர்ப்பும் வராமல் உள்ளன. திண்டுக்கல்லில் சமீபத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது. ஆனால், இன்னமுமே அவர்கள் கிராம பஞ்சாயத்துகளுக்கு வரி கட்ட மறுக்கின்றனர் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT