Published : 05 Dec 2014 09:14 AM
Last Updated : 05 Dec 2014 09:14 AM
உச்ச நீதிமன்றத் தடையை சட்டரீதியாக நீக்கி, உரிய அனுமதியுடன் ஜல்லிக்கட்டு நடத்த தீவிர ஏற்பாடு நடைபெறுகிறது. இதையும் மீறி ஜல்லிக்கட்டு இல்லை யெனில் ‘துக்க பொங்கல்’தான் என்கின்றனர் அலங்காநல்லூர் மக்கள்.
தமிழர் வீரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஜல்லிக்கட்டு, முன்பு 650 கிராமங்களில் நடை பெற்றது. தற்போது 50-க்கும் குறைவான ஊர்களில்தான் நடத்தப் படுகிறது. மேனகா காந்தி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக் கால் 2008-ம் ஆண்டு முதல் ஜல்லிக் கட்டு சிக்கலை சந்திக்கத் தொடங்கியது.
மத்திய அரசுக்கு கடிதம்
உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி ஜல்லிக்கட்டுக்கு அங்கீகாரம் அளித்து, 2009-ல் தமிழக அரசில் தனி சட்டம் இயற்றப்பட்டு, 77 கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் விருப்பப்படி நடைபெற்றது. இப்படி கட்டுப்பாடுகளுடன் நடந்த ஜல்லிக்கட்டிலும் காளைகள் துன்புறுத்தப்படுவதாக பிராணிகள் நல வாரியத்தின் கோரிக் கையை நியாயப்படுத்தி, ஜல்லிக் கட்டுக்கு முழுமையாக தடை விதிக்கும்படி நடிகை ஹேம மாலினி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார். இதன் தொடர்ச்சியாக பாதுகாக்கப்பட்ட விலங்கினப் பட்டியலில் உள்ள சிங்கம், புலி, கரடி உள்ளிட்ட விலங்குகளுடன் காளைகளையும் சேர்த்து மத்திய அரசு 2011-ல் புதிய சட்டத் திருத்தத்தை வெளி யிட்டது.
இதனால் ஜல்லிக்கட்டு நடத்துவதில் மேலும் சிக்கல் ஏற்பட்டது. ஆனாலும் காளைகள் துன்புறுத்தப்படாது என்ற உத்தர வாதத்துடன் மாநில அரசின் ஆதரவுடன் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு கடந்த ஆண்டு வரை நடைபெற்றது.
இந்த நிலையில் கடந்த மே மாதம் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்குமா என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.
ஜல்லிக்கட்டு நிச்சயம் நடக்கும்
அலங்காநல்லூர் கிராம கோயில் காளையை வளர்க்கும் அழகர் இதுகுறித்து குறிப்பிடுவ தாவது: ‘ஜல்லிக்கட்டு நடக்கா விட்டால் காலரா, பேதியால் ஏராளமான இறப்பு நிகழும். அப்படி நடக்காவிட்டால் பொங்கலே இல்லை. அது துக்க பொங்கலாகத்தான் இருக்கும். வரும் செவ்வாய்க்கிழமை திட்டமிட்டபடி பொங்கல் சாற்றுதல் நடக்கும் என்றார். அலங்காநல்லூர் செல்வம் என்பவர் பேசும்போது, ‘ஜல்லிக்கட்டு நடக்காத நிலை உருவானால் போராட்டம் நடக்கும்’ என்றார்.
தடையை நீக்க தீவிர முயற்சி
அலங்காநல்லூர் பேரூராட்சி துணைத் தலைவர் கோவிந்தராஜ் கூறியதாவது: மத்திய அரசு நினைத்தால்தான் ஜல்லிக்கட்டு மீதான தடை எளிதில் நீங்கும். இது குறித்து மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மூலம் புதுடெல்லி யில் 5 மத்திய அமைச்சர்களை சந்தித்துப் பேசியுள்ளோம். நாடாளுமன்றத்தில் இது குறித்து பேசி, பிரதமர் மூலம் சிறப்பு அனு மதியைப் பெற முயற்சி மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் பி.ராஜ சேகரன்: எப்படியும் ஜல்லிக்கட்டு நடத்திவிடலாம் எனக் கருதி அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. தமிழக சட்டப் பேரவையில் சட்டத்திருத்தம் கொண்டு வரலாமா என்பது குறித்தும் ஆலோசனை நடக்கிறது. கிரிக்கெட் பந்து பட்டு வீரர் இறந்துவிட்டதால் கிரிக் கெட்டுக்கே ஒட்டுமொத்த தடை விதிக்கப்பட்டுவிட்டதா, என்ன? தமிழகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட சில மாநிலங்களுடன் நாங்களும் தீர்ப்பை மறுசீராய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்துள்ளோம். பெரும் சட்டப் போராட்டத்தில் எப்படியும் வெற்றி பெற்று ஜல்லிக்கட்டை நடத்திவிட லாம் என நம்புகிறோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT