Published : 16 Apr 2014 10:13 AM
Last Updated : 16 Apr 2014 10:13 AM
தமிழகத்தில் மே மாதத்தில் இருந்து மின் தட்டுப்பாடு நீங்கும் என மின் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் தேவைப்படும் நேரங்களில் மட்டும் 2 மணி நேர மின்வெட்டு அமலாகும் என்றும், பெரும்பாலும் மின் வெட்டு இருக்காது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான மின் வெட்டு நிலவி வருகிறது. இதை சமாளிக்க, பல மணி நேரம் மின்தடை அமல்படுத்தப்படுகிறது. சென்னையில் 2 மணி நேரமும் மற்ற மாவட்டங்களில் சுமார் 5 மணி நேரம் வரையிலும் அவ்வப்போது மின் வெட்டு அமலாகிறது. மின்சாரம் அதிக அளவு உற்பத்தியாகும் நாட்களில், மின் துறையினர் மின் வெட்டை அமல்படுத்துவதில்லை.
கடந்த ஒரு மாதமாக மீண்டும் மின் பற்றாக்குறை ஏற்பட்டு, மின் வெட்டு அமலாகிறது. கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் மின்சாரத் தேவை திடீரென அதிகரித்ததும், மின் நிலையங்களில் ஏற்பட்ட கோளாறு மற்றும் காற்றாலை மின் உற்பத்தியில் ஏற்பட்ட சரிவும்தான் இதற்கு காரணம் என மின் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், வரும் மே மாதம் முதல் மின்வெட்டு அளவு பெருமளவு குறையும் என்றும் மின் தட்டுப்பாடு நீங்கும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
தமிழகத்தில் சுமார் 7,200 மெகாவாட் நிறுவு திறன் கொண்ட காற்றாலைகள் மூலம் 3,500 மெகாவாட்வரை மின்சாரம் உற்பத்தியாகிறது. பொதுவாக ஒவ்வொரு ஆண்டிலும், தென் மேற்கு பருவக்காற்று தொடங்கும் மே முதல் அக்டோபர் வரை காற்றாலை மின் உற்பத்தி அதிக அளவில் இருக்கும். இந்த மாதங்களில் 3,500 மெகாவாட் வரை காற்றாலைகளில் இருந்து மின்சாரம் கிடைக்கும்.
தற்போது காற்றா லைகளில் சுமார் 500 மெகாவாட் வரைதான் உற்பத்தியாகிறது. அதுவும் சில நேரங்களில் பூஜ்ய நிலைக்கு சென்று விடுவதால், மின் தட்டுப்பாடு அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது. மேலும், கோடை வெப்பத்தால் மின் நிலையங்களின் பாய்லரில் அடிக்கடி பழுது ஏற்பட்டு, அவ்வப்போது மின் உற்பத்தி தடைபடுகிறது. இந்த நிலை மே முதல் மாறும். ஏனெனில், தற்போது வெறும் 1,000 மெகாவாட் மட்டுமே பற்றாக்குறையாக உள்ளது. மே முதல் 3,000 மெகாவாட் கூடுதலாக காற்றாலைகள் மூலம் கிடைக்கும். இதனால் மின் பற்றாக்குறை நீங்கும்.
இவ்வாறு மின் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுமார் 12,500 மெகாவாட் தினமும் தேவைப்படும் நிலையில், தமிழக மின் வாரியத்துக்கு 11,500 மெகாவாட் அளவுக்கு தற்போது மின்சாரம் கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT