Published : 13 Dec 2014 10:30 AM
Last Updated : 13 Dec 2014 10:30 AM
இந்த மழைக்காலத்தில் பரவிய ‘மெட்ராஸ் ஐ’ நோய்க்கு புதிதாக வந்த எண்ட்ரோ வைரஸ்தான் காரணம் என்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
‘மெட்ராஸ் ஐ’ எனப்படும் கண் நோய் வழக்கமாக வெயில் அதிகமாக இருக்கும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் பரவலாக காணப்படும். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக மழைக்காலத்தில் ‘மெட்ராஸ் ஐ’ பரவியது. இந்நோயால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப் பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் மட்டும் தினமும் சராசரியாக 70 பேர் சிகிச்சை பெற வந்தனர்.
இந்த ஆண்டு ‘மெட்ராஸ் ஐ’ வழக்கத்துக்கு மாறாக பரவியதால், இந்நோய்க்கு காரணமான அடினோ வைரஸின் தன்மை மாறி இருக்குமோ என்ற சந்தேகம் டாக்டர்களுக்கு எழுந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட 85 பேரின் கண்களில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக பெங்களூருவில் உள்ள வைராலஜி மையத்துக்கு அனுப்பப்பட்டது. அந்த பரிசோதனை முடிவில், இந்த ஆண்டு பரவியுள்ள ‘மெட்ராஸ் ஐ’ நோய்க்கு அடினோ வைரஸ் காரணம் இல்லை என்பதும் புதிதாக வந்துள்ள எண்ட்ரோ வைரஸ்தான் காரணம் என்பதும் தெரியவந்துள்ளது.
ஆபத்து இல்லை
இது தொடர்பாக எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குநர் மற்றும் கண்காணிப்பாளர் டாக்டர் நமிதா புவனேஸ்வரி கூறியதாவது:
‘மெட்ராஸ் ஐ’ நோயால் பாதிக்கப்பட்ட 85 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பரிசோதனை முடிவில் பெரும்பாலான (57%) பாதிப்புக்கு காரணம் புதிதாக வந்துள்ள எண்ட்ரோ வைரஸ்தான் என தெரியவந்துள்ளது. இந்த எண்ட்ரோ வைரஸினால் பிரச்சினை ஒன்றும் இல்லை. யாரும் பயப்பட வேண்டாம். இந்த வைரஸ் எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது. அடினோ வைரஸ் அல்லது எண்ட்ரோ வைரஸ் மூலம் வரும் ‘மெட்ராஸ் ஐ’ நோயை எளிதில் குணப்படுத்திவிடலாம். அதற்கான அனைத்து மருத்துவ வசதிகளும் உள்ளன என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT