Published : 12 Feb 2014 06:56 PM
Last Updated : 12 Feb 2014 06:56 PM
வருகிற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவரான பி.எஸ். ஞானதேசிகன், தனது சொந்த ஊரான திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டுவதால், ‘சிட்டிங்’ எம்.பி.யான என்.எஸ்.வி., சித்தன் இந்த முறை ‘சீட்’ பெற மல்லுக்கட்ட வேண்டியிருக்கும் என காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர்.
திண்டுக்கல் எப்போதுமே காங்கிரஸ் கட்சிக்கு ராசியான தொகுதி. கடைசியாக நடைபெற்ற இரு மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் எம்.பி. சித்தன் இத்தொகுதியில் வெற்றி பெற் றுள்ளார். இந்த மக்களவைத் தேர்தலிலும் போட்டியிட ‘சீட்’ கேட்டு சென்னைக்கும், டெல்லிக்கும் அவர் பறந்து வருகிறார். பொதுவாக தொகுதி பக்கம் அவ்வளவாக தலை காட்டாத அவர், கடந்த ஒரு மாதமாக வழக்கத்துக்கு மாறாக தொகுதியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அடிக்கடி தென்பட தொடங்கி உள்ளார்.
காங்கிரஸ் இந்த தேர்தலில் தனித்து விடப்பட்டதாகக் கூறப் பட்டாலும், சித்தன் எம்.பி. தி.மு.க.வுடன் கூட்டணி ஏற்படும் என நம்புகிறார்.
நெருக்கமான நிர்வாகிகளிடம் அவர், ‘கண்டிப்பாக தி.மு.க.வுடன் தான் கூட்டணி, நமக்கும் அவங்கள விட்டா ஆளில்ல; அவங்களுக்கும் நம்மள விட்டா ஆளில்ல..!’ எனக் கூறி வருகிறார். அதை உறுதி செய்யும் வகையில், ஞாயிற்றுக்கிழமை வங்கி விழாவில் முன்னாள் தி.மு.க. அமைச்சருடன் ஒன்றாகக் கலந்துகொண்டு, பழைய நட்பை புதுப்பித்தார்.
ஞானதேசிகனும் முயற்சி
இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகனுக்கு, திண்டுக்கல் அருகே வத்தலகுண்டு சொந்த ஊர் என்பதால் அவரும், திண்டுக்கல்லில் இந்த முறை போட்டியிட ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
சென்னையில் வசிக்கும் ஞானதேசிகன், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் வந்தால் மறக்காமல் வத்தலகுண்டுவில் சொந்த வீட்டுக்கு வந்து காங்கிரஸ் நிர்வாகிகளை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். கடந்த வாரம் கரூரில் உறவினர் வீட்டில் விஷேச நிகழ்ச்சிக்குச் சென்ற ஞானதேசிகன், வத்தலகுண்டில் இரு நாள்கள் தனது வீட்டில் தங்கி கட்சி நிர்வாகிகளுடன் ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளார்.
அப்போது ஞானதேசிகனும், "கண்டிப்பாகக் கூட்டணி உண்டு, காங்கிரசை யாரும் தனித்துவிட முடியாது, தி.மு.க.வுடன் கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளது.' என நிர்வாகிகளிடம் கூறி உள்ளார்.
திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டால், தனக்கு வெற்றிவாய்ப்பு எப்படி என நெருங்கிய நிர்வாகிகளிடம் அவர் கேட்டறிந்ததாகவும் கூறுகின்றனர். அதனால், அவர் இந்த முறை கண்டிப்பாக திண்டுக்கல் மக்க ளவைத் தொகுதியில் போட்டியிடுவார் என கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
இதுகுறித்து ஞானதேசிகனிடம் கேட்டபோது, ‘திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டி யிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை,’ என்றார். ஆனால், அதே நேரத்தில், போட்டியிட மாட்டேன் என மறுக்கவும் இல்லை.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருப்பதோடு, ஜி.கே.வாசனுக்கும் நெருக்கமானவர் என்பதால், திண்டுக்கல் தொகுதியை கூட்டணிக் கட்சிகளிடம் பேசி பெற்று போட்டியிடுவார் என ஞானதேசிகன் ஆதரவாளர்கள் உறுதியாகக் கூறுகின்றனர். அதனால் இந்த முறை ‘சிட்டிங்’ எம்.பி. என்.எஸ்.வி. சித்தன், ‘சீட்’டுக்காக மல்லுக்கட்டதான் வேண்டும் என்கின்றனர் காங்கிரஸ் நிர்வாகிகள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT