Published : 22 Dec 2014 02:28 PM
Last Updated : 22 Dec 2014 02:28 PM
மும்பை தாக்குதல் தீவிரவாதி ஜகியுர் ரஹ்மான் லக்விக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் ஜாமீன் அளித்ததற்கு கண்டனம் தெரிவித்து மாநிலங்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த ஆதரவு தெரிவித்தன.
கடந்த 2008 நவம்பர் 26-ம் தேதி மும்பையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் முக்கிய குற்றவாளியான ஐகியுர் ரஹ்மான் லக்விக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜாமீன் அளித்தது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து லக்விக்கு காவல் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று (திங்கள்) மாநிலங்களவையில் பாகிஸ்தான் நீதிமன்றத்தின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தும் ரஹ்மான் லக்வி தொடர்பான வழக்கை இழித்தடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கண்டனத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அவையில் அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.
"பொது மக்கள் 166 பேர் பலியாக காரணமாக இருந்த தீவிரவாதியை தண்டிப்பதில் தவறி பாகிஸ்தான் தொடர்ந்து இந்த வழக்கில் மெத்தனம் காட்டி வருகிறது.
ஜாமீன் தொடர்பான தீர்ப்பு, பெஷாவரில் 145 அப்பாவி குழந்தைகள் கொல்லப்பட்ட அடுத்த நாளே வழங்கப்பட்டது மிகவும் வேதனை அளிப்பதாகவும், பாகிஸ்தானின் நிலையை உணர்த்துவதாகவும் உள்ளது.
தீவிரவாத தாக்குதல்கள் தக்க நேரத்தில் தண்டிக்க வேண்டியவை. பாகிஸ்த்தானில் இயங்கும் தீவிரவாத இயக்கங்கள் அனைத்தும் வேரோடு அழிக்கப்பட வேண்டியவை" என்று அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டது.
மேலும், மத்திய அரசு இந்த விவகாரத்தில் அனைத்து நாடுகளின் தலையீட்டுடன் வழக்கை சரியான முறையில் முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, இதே பிரச்சினையை முன்வைத்து பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்து கடந்த 20-ஆம் தேதி மக்களவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT