Published : 10 Apr 2014 12:06 PM
Last Updated : 10 Apr 2014 12:06 PM

எல்கேஜி பாடப் புத்தகத்தில் உதயசூரியன் படம்: சர்ச்சைக்குரிய புத்தகத்தை பயன்படுத்த வேண்டாம் - பள்ளிகளுக்கு தமிழக அரசு உத்தரவு

எல்கேஜி ஆங்கில பாடப் புத்தகத்தில் உதய சூரியன் சின்னம் இடம்பெற்றிருப்பதாகச் சர்ச்சை எழுந்ததையடுத்து சர்ச்சைக்குரிய அந்த புத்தகத்தை பயன்படுத்த வேண்டாம் என பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வழக்கறிஞர் புரட்சி சுரேஷ் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். ஆங்கில எல்கேஜி பாடப் புத்தகத்தில் எழுத்துகளை அறிமுகப்படுத்தும் பகுதியில் ‘S’ என்ற எழுத்தைக் குறிப்பதற்கு ‘SUN’ என்று எழுதப் பட்டு அதை விளக்க கண்ணாடி அணிந்த சூரியன் படம் வரையப்பட்டுள்ளது. இதனைப் பார்ப்பதற்கு தமிழ்நாட்டின் ஒரு அரசியல் கட்சித் தலைவரின் படம் போல் உள்ளது.

அதேபோல் அதிகாலை நிகழ்வுகளை விவரிக்கும் இன்னொரு பக்கத்தில் உதய சூரியன் சின்னம் இடம் பெற்றுள்ளது. மழலைக் குழந்தைகள் மனதில் அரசியல் கருத்துகளைத் திணிக்கும் வகையில் உள்ள இந்தப் பக்கங்களை எல்கேஜி பாடப் புத்தகத்திலிருந்து நீக்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ என்று அந்த மனுவில் அவர் கோரியிருந்தார்.

இந்த மனு தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட முதன்மை அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்பந்தப்பட்ட அந்தப் புத்தகம் மாநில பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பொதுக்கல்வி வாரியத்தில் ஒப்புதல் பெறாதது.

ஆகவே அந்தப் புத்தகத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அறிவுறுத்தும்படி மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் மெட்ரி குலேஷன் பள்ளி ஆய்வாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழக அரசின் இந்த கருத்துகளைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x