Published : 13 Feb 2014 08:08 PM
Last Updated : 13 Feb 2014 08:08 PM

திமுக - காங்.- தேமுதிக கூட்டணிக்கு அறிகுறியே இல்லை: கருணாநிதி

திமுக - காங்கிரஸ் - தேமுதிக கூட்டணி உருவாவதற்கான அறிகுறிகளே இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.

திருச்சியில் திமுக 10-வது மாநில மாநாடு வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ளது. இதில் பங்கேற்க திமுக தலைவர் கருணாநிதி சென்னையிலிருந்து இன்று பிற்பகல் திருச்சிக்கு புறப்பட்டார். முன்னதாக, கோபாலபுரம் இல்லத்தில் செய்தியாளுக்கு அவர் அளித்த பேட்டி:

திருச்சி மாநாடு பற்றி..?

திருச்சியில் தி.மு.கழகத்தின் சார்பில் நடைபெறும் மாநாடுகள் எப்போதுமே திருப்புமுனை மாநாடுகளாக அமைந்திருக்கின்றன. அந்த வகையில் இந்த மாநாடும் திருப்புமுனை மாநாடாக - இந்திய துணைக் கண்டத்தையே திரும்பிப் பார்க்க வைக்கும் மாநாடக அமையும் என்று கருதுகிறேன்.

அப்படி அமைக்கக்கூடிய வாய்ப்பு தி.மு.கழக தொண்டர்களுக்கு, தலைவர்களுக்கு, செயலாளர்களுக்கு உண்டு என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் குறித்து?

தமிழக மக்களை தாக்கியுள்ள பட்ஜெட். அதனால் 'தாக்கல்' செய்துள்ள பட்ஜெட் என்கிறீர்கள்.

திருச்சி மாநாடு அரசியல் ரீதியாக கூட்டணி மாற்றம் ஏற்படுத்துமா?

ஒரு கூட்டணி உருவான பிறகு, அதில் மாற்றம் செய்வதற்கு இடமில்லை.

புதிய கட்சிகள் வர இருக்கிறதா?

வரலாம்; வராமலும் இருக்கலாம். நாங்கள் எடுத்த முடிவை ஒற்றுமையோடு நிறைவேற்ற முற்படுவோம்.

திமுக - காங்கிரஸ் - தேமுதிக கூட்டணி உருவாகுமா?

பத்திரிகைகள்தான் அப்படி ஒரு கூட்டணியை உருவாக்க முயற்சிக்கின்றன. அதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. அப்படி ஒரு சூழ்நிலையும் இல்லை.

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு எந்த அளவிற்கு இருக்கிறது?

வெற்றி வாய்ப்பை எதிர் பார்க்காமலா நாங்கள் தேர்தலில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x