Published : 31 Dec 2014 09:39 AM
Last Updated : 31 Dec 2014 09:39 AM

வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கல் முன்னேற்பாடு: 4 லட்சம் லிட்டர் பாதுகாப்பான குடிநீர் வழங்க திட்டம்

வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு ஆண்டுதோறும் காணும் பொங்கலன்று அதிக அளவிலான பார்வையாளர்கள் வருவது வழக்கம். கடந்த ஆண்டு காணும் பொங்கல் நாளில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 186 பேர் வந்தனர். இந்த ஆண்டும் ஏராளமானவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்வது குறித்து பல்வேறு துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வண்டலூர் உயிரியல் பூங்காவில் நேற்று நடைபெற்றது.

பூங்கா இயக்குநர் கே.எஸ்.எஸ்.வி.பி.ரெட்டி கூட்டத்தில் தலைமை வகித்து பேசும்போது, “இந்த ஆண்டு காணும் பொங்கலுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக் காக 4 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப் படுகிறது. அந்த குடிநீரை தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரியம் மூலம் பெற ஏற்பாடு செய்ய வேண்டும். பார்வையாளர்கள் வசதிக்காக பல் வேறு வழித்தடங்களில் கூடுதல் பஸ் களை மாநகர போக்குவரத்துக்கழகம் மூலம் ஏற்படுத்த வேண்டும். ஆம்புலன்ஸுடன் மருத்துவர் குழு, தீயணைப்பு வாகனம் ஆகியவை தயார் நிலையில் இருக்க வேண்டும்” என்று பல்துறை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

வேடந்தாங்கலில்..

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் பொங்கலையொட்டி மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடு கள் குறித்து சென்னை மண்டல வன உயிரின காப்பாளர் கீதாஞ்சலியிடம் கேட்டபோது, “இந்த சரணாலயத்தில் மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல் ஆகிய இரு நாள்களில் அதிக அளவிலான பார்வையாளர்கள் வருவார்கள். அவர்களுக்காக போதிய குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பார்வையாளர் களை முறைப்படுத்த கூடுதலாக 12 வன அலுவலர்கள் வரவழைக்கப்பட உள்ளனர். பாதுகாப்புக்காக காவல்துறை சார்பில் 10 காவலர்களை அனுப்புமாறும் கோரப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸுடன் கூடிய மருத்துவர் குழுவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x