Published : 26 Dec 2014 12:24 PM
Last Updated : 26 Dec 2014 12:24 PM

சாலையில் மயங்கி விழுந்த நபரிடம் பரிவு காட்டிய போலீஸ்: சென்னையில் நெகிழ்ச்சி சம்பவம்

சாலையில் நினைவின்றி மயங்கி விழுந்த நபருக்கு உணவு, குடிநீர் கொடுத்து மருத்துவமனையில் சேர்த்த சென்னை போலீஸ்.

பொதுவாக இரக்க சுபாவத்திற்கும் போலீஸ் துறையினருக்கும் தொடர்பில்லை என்றே நாம் கருதி வருகிறோம். ஆனால் நேற்று அந்தக் கருத்தை முறியடிக்குமாறு சாலையில் மயங்கிக் கிடந்த நபர் ஒருவரை சென்னை அண்ணாசாலை போலீஸ் நிலைய காவலர்கள் எழுப்பி உணவு கொடுத்த காட்சி பலரையும் நெகிழச் செய்துள்ளது.

அண்ணா சாலை போலீஸ் நிலைய ஹெட் கான்ஸ்டபிள் ராமலிங்கம், மற்றும் சக ஊழியர் டி.கே.ஜீவா ஆகியோர் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை அருகே லுங்கி சகிதம் மயங்கிக் கிடந்த ஒரு உருவத்தைக் கண்டனர். காலை 11.30 மணியளவில் இது நடந்துள்ளது.

இவர்கள் பார்க்கும் போது மக்கள் அவரைச் சுற்றி நின்று கொண்டு வேடிக்கை பார்த்துள்ளனர். அவரை மருத்துவனைக்கு அழைத்துச் செல்ல ஒருவரும் முன்வரவில்லை.

"அவர்கள் மயங்கிய நபரை சும்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். நாங்கள் அவர்களைக் கலையச் சொல்லி பிறகு அந்த நபருக்கு உதவ முனைந்தோம். அந்த நபர் கண்களைத் திறக்கவில்லை. உடனே மற்ற இரண்டு போலீஸ்காரர்கள் அவர் முகத்தில் நீரைத் தெளித்தனர். அவர் மெதுவாக கண்களைத் திறந்தார், அப்போது என் சக ஊழியர் கீரனை அழைத்து அவருக்கு உணவும் ஊட்ட நீரும் எடுத்து வரக் கூறினேன். அவரால் கையைக் கூட அசைக்க முடியாத நிலையில் உணவை அவருக்கு ஊட்டிவிட்டோம்.” என்றார் ஹெட் கான்ஸ்டபிள் ராமலிங்கம்.

அதன் பிறகு அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அந்த நபரால் பேசமுடியவில்லை. தட்டுத் தடுமாறி ஓரிரு வார்த்தைகளை தெலுங்கு மொழியில் அந்த நபர் பேசியுள்ளார். மேலும் சிவ சிவா என்று அனத்திய படியே அந்த நபர் இருந்துள்ளார்.

அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதைக் கண்டுபிடிக்க முயன்று வருவதாக அவர் தெரிவித்தார்.

மீண்டும் மதியம் அந்த நபரை ராமலிங்கம் பார்க்கச் சென்ற போது அந்த நபர் இருகண்களிலும் கண்ணீருடன் இருப்பதைக் கண்டேன் என்றார். "இதன் மூலம் அவர் என்ன சொல்ல வந்தார் என்பது எனக்கு புரியவில்லை. இப்படிப்பட்ட நபர்களை சாலையில் பார்க்கும் போது மக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்காமல் அவருக்கு உதவி செய்வது அவசியம். ஏனெனில் நாளை இவர்களுக்கே கூட இப்படிப்பட்ட நிலைமை ஏற்படலாம், ஆகவே உதவுங்கள்” என்றார் ராமலிங்கம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x