Published : 26 Dec 2014 05:59 PM
Last Updated : 26 Dec 2014 05:59 PM

ஆதி திராவிடர் நலப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் நிறுத்தம்: திருமாவளவன் கண்டனம்

ஆதி திராவிடர் நலப் பள்ளிகளில் கடந்த காலத்தில் இருந்த நடைமுறையையே பின்பற்றி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழக அரசு ஆசிரியர் பணி நியமனங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தி வருகிறது. ஆசிரியர்களை நியமனம் செய்யும் நடைமுறையில் தமிழக அரசின் ஓரவஞ்சனையான அணுகுமுறை வெளிப்படுகிறது.

குறிப்பாக, ஆதி திராவிடர் நலப் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்வதில் திட்டமிட்டே தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் 100 விழுக்காடு ஆசிரியர் நியமனங்களை நிறைவேற்றியிருக்கிற அரசு, ஆதி திராவிடர் நலப் பள்ளிகளில் பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி ஆசிரியர்களை நியமனம் செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது.

ஆதி திராவிடர் நலப் பள்ளிகளில் ஆதி திராவிடர் அல்லாத இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பி, அதனடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர்.

தற்போது நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதைக் காரணம் காட்டி ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்தைத் தமிழக அரசு முற்றிலும் நிறுத்தி வைத்துள்ளது. அரசின் இந்தப் போக்கு கண்டிக்கத்தக்கது.

ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் கடந்த காலத்தில் இருந்த நடைமுறையையே பின்பற்றி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். ஓவியம், இசை, கைத்தறி போன்ற துறைகளுக்கான சிறப்பு ஆசிரியர்கள் சுமார் 16,000 பேர் பகுதி நேர ஆசிரியர்களாக மாதம் ரூ.5,000-க்கு மட்டுமே பணியாற்றி வருகிறார்கள். தமிழக அரசு அவர்களை முழு நேர ஆசிரியர்களாகப் பணி நியமனம் செய்ய வேண்டும்" என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x