Published : 03 Dec 2014 10:50 AM
Last Updated : 03 Dec 2014 10:50 AM

வாள்வீச்சில் பதக்கம் அள்ளும் ஹேமா

இன்று டிசம்பர் 3: மாற்றுத்திறனாளிகள் தினம்

இரண்டு கால்களும் போலியோவால் செயலிழந்தாலும் நெஞ்சுரம் ஹேமாவை அஞ்சல்வழியில் பட்டப்படிப்பை முடிக்க வைத்துள்ளது. சிறுவயதில் தன்னை வசீகரித்த ஜான்சி ராணி லக்குமிபாயை போல் வாள் வீச வேண்டும் என்ற துடிப்பு வந்தபோது, விளையாட்டு ஆசிரியர் கார்த்திகேயன் உதவியுடன் கால் முடங்கின நிலையிலும் வீல் சேரில் இருந்தபடி வாள்வீச்சு, வட்டு எறிதல், குண்டு எறிதல் என பல்வேறு சாகசங்களை நிகழ்த்த ஆரம்பித்தவர் ஹேமா.

18 தங்கம், ஏழெட்டு வெள்ளி, வெண்கலம் என மாநில, தேசிய, ஆசிய அளவிலான பதக்கங்களையும், அன்னை தெரசா விருது, மாற்றுத்திறனாளி சாதனையாளர் விருது என பல விருதுகளையும் பெற்ற ஹேமாவுக்கு இப்போது 31 வயது. ’தி இந்து’-விடம் அவர் பேசியதாவது:

‘‘அப்பா வாட்ச்மேன். பாலகாட்டில் இருந்து கோவைக்கு குடிவந்த பின்பு ஊன்றுகோலை வெச்சுட்டு 24 கம்பெனிகள்ல வேலை கேட்டு ஏறி இறங்கினேன். ஒரு கம்பெனியில் வேலை கிடைச்சுது. ஒன்றரை வருடம்தான் அந்த வேலை. இப்போ கோவை பாஸ்போர்ட் ஆபீஸில் விண்ணப்பம் நிரப்பி தருவது, யோசனைகள் வழங்குவது என வேலை போயிட்டுருக்கு.

ஆனா, இதையெல்லாம் தாண்டி ஏதாச்சும் சாதிக்கணும்னு வாள் சண்டை கத்துக்கிட்டேன். அதில் வந்ததுதான் பதக்கங்கள். 2010-ல் சென்னையில் மாநில அளவிலான போட்டியில் தங்கம். 2010 ஒடிசாவில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் சாம்பியன்சிப்.

சர்வதேச அளவில் 2012-ல் கனடாவில் நடந்த போட் டிக்கு சென்று வந்தேன். பதக்கம் கிடைக்கவில்லை. ஆனால் மீண்டும் முயற்சிப்பேன், பதக்கம் வெல்வேன்!’’ என்கிறார் சாதனை வேட்கையோடு. வருகிற வாரத்தில் சதீஸ்கர் தேசிய அளவிலான போட்டிக்கு செல்லவிருக்கிறார் ஹேமா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x