Published : 23 Dec 2014 12:05 PM
Last Updated : 23 Dec 2014 12:05 PM

ஆதார் மையங்கள் தாலுக்கா அலுவலகங்களில் மட்டுமே செயல்படும் நிலை: கிராமப்புற மக்கள் பெரிதும் பாதிப்பு

சென்னை தமிழகம் முழுவதும் தாலுக்கா அலுவலகங்களில் மட்டுமே ஆதார் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் ஆதார் அட்டைக்காக நீண்டதூரம் பயணிக்க வேண்டியிருப்பதாக கிராமப்புற மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கடந்த 2011-ம் ஆண்டு தொடக்கத்தில் யு.ஐ.டி.ஏ.ஐ நிறுவனம் நேரடியாக ஆதார் அட்டை வழங்கும் பணிகளை மேற்கொண்டது. அதன் பின்னர் மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநரகம் மூலம் ஆதார் அட்டை வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநரகம் தமிழக அரசுடன் இணைந்து கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம்களை நடத்தி, 5 கோடி பேரின் விவரங்களை கணினியில் பதிவு செய்தது.

இதில் 4.74 கோடி பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் கடந்த நவம்பர் 1-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 461 இடங்களில் ஆதார் நிரந்தர மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில் சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் தாலுக்கா அலுவலகங்களில் மட்டுமே இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதனால் ஆதாருக்கு விண்ணப்பிக்க கிராமப்புற மக்கள், நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் சங்கச் செயலர் கே.நேரு கூறியதாவது: கிராமப் பகுதியில் வசிப்போர் பெரும்பாலும், விவசாயிகளாகவும், விவசாயத் தொழிலாளர்களாகவும் உள்ளனர். ஆதார் மையங்களை அந்தந்த தாலுக்கா அலுவலகங்களில் மட்டுமே நடத்துவதால் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், தங்கள் விவசாயப் பணிகளை விட்டுவிட்டு, பணத்தை செலவிட்டு, சுமார் 50 கி.மீ தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

அதனால் கிராமப்புற மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகிறார்கள். அவர்களின் நலன் கருதி முன்பு நடத்தியதை போலவே, கிராமங்கள் தோறும் ஓரிரு நாட்கள் ஆதார் முகாம்களை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தமிழ்நாடு மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநரக இணை இயக்குநர் எம்.ஆர்.வி.கிருஷ்ணாராவ் இதுபற்றி கூறியதாவது:

கடந்த 2011 முதல் கிராமப்புறங்களில் முகாம்களை நடத்தி வந்திருக்கிறோம். ஆனால் பொதுமக்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டாததால் அந்த முகாம்களில் ஆபரேட்டர்கள் வேலையின்றி இருந்தனர். இப்பணிக்கு ஒப்பந்தம் செய்த நிறுவனங்களால் ஆபரேட்டர்களுக்கு ஊதியம் கூட வழங்கமுடியவில்லை.

அதனால் கிராமப்புறங்களில் முகாம் நடத்தும் திட்டம் எதுவும் எங்களிடம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x