Published : 15 Feb 2014 01:30 AM
Last Updated : 15 Feb 2014 01:30 AM
தமிழக பட்ஜெட்டில் கோவை பகுதிக்கான திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டி ருப்பதால் கடும் அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் இந்த அதிருப்தி அலை அதிமுக வெற்றிக்கு சவாலாய் இருக்கும் என ஆளும் கட்சியினர் கவலை தெரிவிக்கின்றனர்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி தமிழகத்தில் 11 தொகுதிகளில் தோல்வியைத் தழுவியது. இதில் பெரும்பகுதி கொங்கு மண்டலத்தில் உள்ளவை. திமுக ஆட்சியில் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் கோவை இரண்டாம் பட்சமாக பார்த்ததாலேயே கொங்கு மண்டலத்தில் திமுக-வுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. சட்டமன்றத் தேர்தலிலும் இந்த எதிர்ப்புகள் எதிரொலித்து விடக்கூடாது என்பதற்காகவே கோவையில் செம்மொழி மாநாட்டை அறிவித்து 200 கோடிக்கான திட்டங்களையும் தந்தது திமுக அரசு.
அதையொட்டி, ’கோவை மத்திய சிறையை வெள்ளலூருக்கு இடம் மாற்றிவிட்டு, அங்கே உலகத்தரம் வாய்ந்த தாவரவியல் பூங்கா அமைக்கப்படும், காந்திபுரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் 3 அடுக்கு பாலம் கட்டப்படும்' என்றெல்லாம் அறிவித்து அரசாணையும் வெளியிடப்பட்டது. அத்துடன் கொமுக-வுடன் கூட்டணியும் அமைத்து தேர்தலைச் சந்தித்தது திமுக. ஆனாலும் பொதுவான எதிர்ப்பு அலையால் சட்டமன்றத் தேர்தலிலும் திமுக-வை கைவிட்டது கொங்கு சீமை.
அடுத்ததாக ஆட்சிக்கு வந்த அதிமுக, கோவைக்காக திமுக அரசு அறிவித்திருந்த திட்டங்களை எல்லாம் கிடப்பில் தள்ளியது. காந்திபுரம் மூன்று அடுக்கு பாலத்தை இரண்டு அடுக்காக மாற்றியது. அதுவும் இன்றுவரை செயலுக்கு வந்தபாடில்லை. அதேபோல், திமுக அரசால் முன்மொழியப்பட்டு அதிமுக அரசால் வழிமொழியப்பட்ட மேற்கு புறவழிச்சாலைத் திட்டம், இந்த ஆட்சியில் முதல்வர் அறிவித்த உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பால திட்டம், கறிவேப்பிலை ஃபேக்டரி திட்டம். இவை அனைத்துமே அறிவிப்போடு நிற்கின்றன.
கோவைக்கு ஏதுமில்லை
இந்த நிலையில் தமிழக அரசின் பட்ஜெட்டிலும் கோவைக்கான சிறப்புத் திட்டங்கள் ஏதுமில்லை. இதுகுறித்து ’தி இந்து’விடம் பேசிய கோவை அதிமுக முக்கியப் பொறுப்பாளர் ஒருவர், ’’தங்க ஊசி என்பதால் வயிற்றில் குத்திக்கொள்ளமுடியாது. அதுபோல, நடப்பது அதிமுக ஆட்சி என்பதற்காக தவறுகளை சொல்லாமல் இருக்கமுடியாது. கோவை பகுதியின் உண்மை நிலவரத்தை இங்குள்ள கட்சிப் பொறுப்பாளர்கள் யாரும் முதல்வரிடம் தெரிவிப்பதில்லை. பதவியில் இருப்பவர்கள் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினருடன் கூட்டணி அமைத்துக் கொண்டு பணம் பண்ணுவதிலேயே குறியாய் உள உள்ளனர். கூட்டணியில் இருப்பதால் கம்யூனிஸ்ட்களுக்கும் வீதிக்கு வந்து போராட மனமில்லை. எனவே இங்குள்ள மக்களின் பிரச்சினைகளும் மனநிலையும் அரசின் கவனத்துக்குப் போகாமலேயே இருக்கிறது. அதனால்தான் இந்த பட்ஜெட்டில் கோவை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. இதை உடனடியாக சரிசெய்யாவிட்டால் 2009 தேர்தலில் திமுக அணி படித்த பாடத்தை இந்தத் தேர்தலில் நாங்களும் படிக்க வேண்டியிருக்கும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT