Published : 31 Dec 2014 05:50 PM
Last Updated : 31 Dec 2014 05:50 PM

தனுஷ்கோடிக்கு அகதியாக வந்த இலங்கை ஐயப்ப பக்தர் கைது

தனுஷ்கோடிக்கு அகதியாக வந்த இலங்கை ஐயப்ப பக்தர் ஒருவரை புதன்கிழமை காவல்துறையினர் கைது செய்தனர்.

இலங்கையிலுள்ள கிளிநொச்சி பகுதியை சார்ந்த ராஜேந்திரன் மகன் மணிகண்டன் (24) ஐயப்ப பக்தரான இவர் சபரிமலைக்குச் செல்வதற்காக செவ்வாய்கிழமை மாலை 5 மணியளவில் யாழ்பாணம் கடற்கரை பகுதியிலிருந்து படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அரிச்சல் முனைப்பகுதிக்கு புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் வந்தடைந்தார்.

தனுஷ்கோடி அரிச்சல்முனைப் பகுதியில் சந்தேகத்திற்குரிய முறையில் ஐயப்ப பக்தர் ஒருவர் சுற்றிக் கொண்டிருக்கிறார் என தகவல் க்யூ பிரிவு காவல்துறையினருக்கு தகவல் வரவே மணிகண்டனை பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

முன்னதாக மணிகண்டன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

13 வருடங்களுக்கு முன்னர் மண்டபம் அகதிகள் முகாமில் படித்தேன் பின்னர். 2002க்கு பின்னர் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசிற்கும் போர் ஒப்பந்தம் ஏற்பட்டு அமைதியாக இருந்த காலகட்டத்தில் திரும்பவும் கிளிநோச்சிக்கு குடும்பத்தோடு சென்று விட்டோம். சபரிமலைக்கு விமானத்தில் செல்லும் அளவிற்கு என்னிடம் வசதி இல்லை. எனவே படகு மூலம் தனுஷ்கோடி வந்தேன், என்றார்.

முன்னதாக 2009 ஜனவரி மாதம் சபரிமலைக்கு வந்த இலங்கையைச் சேர்ந்த 30 அய்யப்ப பக்தர்கள், உரிய ஆவணங்களுடன் வராததால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x