Published : 13 Dec 2014 10:24 AM
Last Updated : 13 Dec 2014 10:24 AM
உ.வே.சா. என்று அழைக்கப்படும் தமிழறிஞர் உ.வே.சாமிநாத ஐயர் திருவல்லிக்கேணியில் வாழ்ந்த வீடு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
பண்டைத் தமிழ் இலக்கியங் களைத் தேடியெடுத்து பதிப்பித்த பெருமைக்குரியவர் தமிழ் தாத்தா உ.வே.சா. கும்பகோணம் அருகேயுள்ள உத்தமதானபுரத்தில் பிறந்த இவர், அழிந்து கொண்டி ருந்த 90-க்கும் மேற்பட்ட தமிழ் நூல் களையும், 3000-க்கும் அதிகமான ஏட்டுச் சுவடிகளையும் கையெ ழுத்து ஏடுகளையும் ஊர் ஊராக அலைந்து சேகரித்து ஆவணப் படுத்தினார்.
1903-ல் சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்ற வந்தபோது, திருவல்லிக்கேணியில் 20 ரூபாய் வாடகையில் திருவட்டீஸ்வரன் பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் வசித்தார். பிறகு, அந்த வீட்டை விலைக்கு வாங்கி, தனது ஆசிரியர் நினைவாக வீட்டுக்கு ‘தியாகராச விலாசம்’ என்று பெயர் வைத்தார். இந்த இல்லத்துக்கு வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் வந்துள்ளார்.
இரண்டாம் உலகப் போரின் போது 1942-ல் சென்னையிலிருந்து வெளியேறி, திருக்கழுகுன்றத்தில் உள்ள திருவாவடுதுறை ஆதினத் துக்குச் சொந்தமான இடத்தில் வசித்தார்.
கோரிக்கை நிராகரிப்பு
பின்னர், அவரது உறவினர் களின் பராமரிப்பில் இருந்த இந்த வீடு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 2012 செப்டம்பரில் வீட்டின் உள்பகுதி இடிக்கப்பட்டது. அதற்கு பத்திரிகைகள், தமிழறிஞர்கள் கண்டனம் தெரிவிக்க, கட்டிட இடிப்புப் பணி தடைபட்டது. சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள் அழிந்துவிடாமல் அவற்றைத் தொகுத்து அச்சிட்டு நூல்களாக்கிய உ.வே.சா. சென்னையில் வாழ்ந்த வீட்டை தமிழக அரசு அவரது நினைவு இல்லமாகப் பராமரிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை தமிழறிஞர்கள் பலரும் முன்வைத்தனர். தற்போது அந்த வீடு இடித்து தரைமட்டமாக் கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்தப் பகுதியில் வசித்துவரும் எடமச்சி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரான எ.ந.சபாபதி கூறுகையில், “மூத்த தமிழறிஞர் வாழ்ந்த வீடு இதுன்னு ரொம்ப பெருமையா இருந்துச்சு. ரெண்டு வருசத்துக்கு முந்தி இதை இடிக்கையில நிறைய அதிகாரிங்க வந்தாங்க. என்கிட்டக்கூட விசாரிச்சாங்க. நானும் சொன்னேன். இப்ப என்னான்னா, மொத்தமா இடிச்சித் தள்ளிட்டாங்க’’ என்றார் ஆதங்கத்துடன்.
ஆர்.நல்லகண்ணு வருத்தம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கூறும்போது, ‘‘உ.வே.சாமிநாத ஐயரின் பங்கு இல்லாமல் புறநானூறு, குறுந்தொகை, சிலப்பதிகாரம் உள்ளிட்ட தமிழ் இலக்கிய நூல்கள் மற்றும் காப்பியங்கள் நமக்குக் கிடைத்திருக்காது.
பேருந்து, ரயில் போக்குவரத்து வளர்ச்சி பெறாத காலத்தில் ஊர் ஊராக நடந்து சென்று தமிழ் நூல்களை திரட்டித் தொகுத்தவர் உ.வே.சா. அவர் வாழ்ந்த வீடு இடிக்கப்பட்டது மிகவும் வருந்தத்தக்கது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT