Published : 04 Dec 2014 10:10 AM
Last Updated : 04 Dec 2014 10:10 AM

தடையில்லாமல் நடக்கும் ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை: ஆன்லைன் வியாபாரத்தில் ஈடுபட்ட 10 பேர் கைது

தமிழகத்தில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை எந்த தடையும் இல்லாமல் நடக்கிறது. சென்னையில் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை நடத்திய 10 பேரை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

பிற மாநிலங்களில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்படாததால் அந்த மாநில லாட்டரி சீட்டுகள் தமிழகத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.

வெளி மாநிலங்களில் இருந்து இண்டர்நெட் மூலமாக ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகள் இங்கு அனுப்பிவைக்கப்படுகிறது. அதில் உள்ள நம்பர்களை பேப்பரில் எழுதி வியாபாரிகள் வைத்துக்கொள்வார்கள். பின்னர் அந்த லாட்டரி நம்பர்களுக்கு, ஒரு நம்பர் மட்டும் கொடுக்கப்பட்டு ஒரு டோக்கன் தயார் செய்யப்படும். வாடிக்கையாளர்களுக்கு லாட்டரி சீட்டுக்கு பதில் இந்த டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும்.

லாட்டரி சீட்டுகளை வாங்கிச் செல்லும் வாடிக்கையாளர்கள் தங்களது செல்போன் நம்பரை மட்டும் வியாபாரிகளிடம் கொடுத்து விட்டு செல்வார்கள். இதன் மூலம் வியாபாரிகள், குலுக்கலில் பரிசு பெற்றவர்களை செல்போனில் அழைத்து பரிசு கொடுப்பார்கள். ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமைகளில் குலுக்கலை நடத்துகிறார்கள்.

மேலும் லாட்டரிக்கென தனி வெப்சைட்டையும் வியாபாரிகள் தொடங்கியுள்ளனர். அதில் வழக்கமான உறுப்பினர்கள் மட்டும் லாட்டரி சீட்டுக்களை ஆன்லைன் மூலமாகவே வாங்க லாம். சீட்டுக்கான பணத்தையும் ஆன்லைன் மூலமாகவே செலுத்த லாம். பரிசு விழுந்தால் அதற்கான பணம் மட்டும் நேரடியாக வழங்கப்படும்.

இதே போல ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை நடத் திய 10 பேரை சென்னை விருகம் பாக்கத்தில் போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர். அவர்க ளிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம், 13 செல்போன்கள், கம்ப்யூட்டர்கள் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னையில் இது போன்று பல இடங்களில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனை போலீ ஸார் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக உள்ளது. கேரள அரசின் லாட்டரி டிக்கெட்டுகள் தமிழகம் முழுவதும் சர்வ சுதந்திரமாக விற்கப்படுகின்றன. கேரளா அரசின் லாட்டரிகளில் 40 சதவீதம் தமிழகத்தில் விற்கப்படுகிறது. லாட்டரி மூலம் கேரளா பெறும் ஆண்டு வருமானம் சுமார் ஆயிரம் கோடி. இதில் தமிழர்களின் பணம் சுமார் 400 கோடி. தமிழர்களின் பெருவாரியான பணம் கேரளாவின் கஜானாவுக்கு கள்ளத்தனமாக செல்கிறது.

தமிழகத்தில் லாட்டரிக்குத் தடை என்றதுமே தமிழக லாட்டரி முதலாளிகள் பலரும் பினாமிகள் பெயரில் கேரள மாநில லாட்டரி உலகில் கால்பதித்து விட்டனர். தமிழகத்தில் ஏற்கனவே லாட்டரி விற்பனை செய்த லாட்டரி முதலாளிகள் மூலம்தான் தற்போதும் திருட்டுத்தனமாக விற்பனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x