Published : 22 Dec 2014 12:54 PM
Last Updated : 22 Dec 2014 12:54 PM
கோவை மாவட்டம் இடையர்பாளையம் மற்றும் பொன்னாக்கனி கிராமங்களில் சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்பு உருக்கு சுடுமண் ஊதுகுழல்கள், பெரிய அளவிலான இரும்பு கசடுகள் உள்ளிட்ட பல்வேறு தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அப்போதே அங்கு இரும்பு தொழிற்சாலைகள் இயங்கியது தெரியவந்ததுள்ளது.
கோவை மாவட்டம் பாப்பம்பட்டி அருகே இருக்கின்றன இடையர்பாளையம் மற்றும் பொன்னாக்கனி கிராமங்கள். இங்கு வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையம் மேற்பரப்பு ஆய்வுகளை மேற்கொண்டது. அப்போது அங்கு சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பழமையான நெடுங்கல், இரும்பு உருக்க பயன்படுத்தப்பட்ட சுடுமண்ணால் செய்யப்பட்ட 10-க்கும் மேற்பட்ட ஊது குழல்கள், கொங்கு மண்ணுக்கே உரித்தான பல வண்ண வேலைப்பாடுகள் கொண்ட சிவப்பு, கருப்பு நிற பானை ஓடுகள், குறியீடுகள், சங்கு வளையல்கள், கல் மணிகள், மான் கொம்புகள், சில்லுகள், பெரிய அளவிலான இரும்பு கசடுகள் உள்ளிட்ட தொல்பொருட்கள் கிடைத்தன.
ஆய்வு மையத்தை சேர்ந்த தூரன் சு. வேலுச்சாமி, வே.நாகராசு கணேசகுமார், ரவிச்சந்திரன், பொன்னுசாமி, சதாசிவம், ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் மேற்கண்ட ஆய்வை நடத்தினர். இதுகுறித்து ஆய்வு மையத்தின் நாணயவியல் பொறுப்பாளர் ரவிச்சந்திரன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
பண்டைய தமிழ் சமூகத்தில் இடையர் என்று அழைக்கப்பட்ட முல்லை நில மக்கள் மலைக்கும் வயலுக்கும் இடைப்பட்ட நிலத்தில் கால்நடைகளை மேய்த்தனர். அவர்கள் பொன்னைவிட தங்களது கால்நடைகளை உயர்வாக கருதியதாக பாணாற்றுப்படை உள்ளிட்ட சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
அப்படியான கால்நடைகளை பிறர் கவர்ந்துச் செல்லும்போது அவர்கள் குழுப் போரில் தங்கள் உயிரையும் கொடுத்தார்கள். அப்படி இறந்துபோன வீரர்களுக்காக நெடுங்கற்கள் எழுப்பப்பட்டன. அப்படியான ஒரு நெடுங்கல்தான் இப்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது இரண்டு அடி அகலமும், எட்டு அடி உயரமும் கொண்டுள்ளது. இப்போது இடையர்பாளையத்தில் இடையர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அதிகளவு வசிப்பது மேற்கண்ட ஆதாரங்களுக்கு வலு சேர்க்கிறது.
இடையர்பாளையத்துக்கு அருகிலுள்ளது பொன்னாக்கனி கிராமம். இங்கு இரும்பு கசடுகள் மற்றும் சுடுமண்ணால் செய்யப்பட்ட ஊதுகுழல்கள் பத்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் இங்கு பெருங்கற்படை பண்பாட்டின் ஓர் அங்கமான கல் வட்டமும், கருப்பு, சிவப்பு பானை ஓடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
உலோக கண்டுபிடிப்புகளில் முக்கியத்துவம் வாய்ந்தது இரும்பு. மனித குல நாகரிக வரலாற்றில் வேட்டை மற்றும் வேளாண்மையில் முக்கிய பங்கு வகித்தது இரும்பு.
பழந்தமிழர் இரும்பு தாதுக்களை உருக்கி இரும்பு தயாரித்தனர் என்று குறுந்தொகை உள்ளிட்ட சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இரும்பை உருக்காக மாற்ற 1,100 சென்டிகிரேட் வெப்பமும் எஃகாக மாற்ற 1,300 சென்டிகிரேட் வெப்பமும் தேவை. அந்த அளவுக்கு உலையில் வெப்பத்தை அதிகரிக்கச் செய்ய பழந்தமிழர்கள் சுடுமண்ணால் செய்யப்பட்ட ஊது குழல்கள் மூலம் காற்றை உலைக்குள் செலுத்தினர். அந்த ஊது குழல்கள், அதன் மூலம் செய்யப்பட்ட இரும்பு கசடுகளும்தான் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த ஊது குழல்கள் 15 செ.மீட்டர் நீளமும் 6 செ.மீட்டர் விட்டமும் கொண்டவை. இவை சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. எனவே, அந்த காலகட்டத்திலேயே இங்கு இரும்புத் தொழிற்சாலைகள் இருந்திருக்கின்றன என்பது தெரிய வருகிறது.
மேலும் இதற்கு வலு சேர்க்கும் விதமாக ஃபிளினி என்கிற வரலாற்று ஆய்வாளர் தனது ‘நேட்சுரல் ஹிஸ்டரி’ புத்தகத்தில் இரும்புப் பொருட்கள் சேர நாட்டிலிருந்து ரோமுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக குறிப்பிடுகிறார். மேலும், அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்து வந்தபோது மன்னன் புருஷோத்தமன் கொங்கு பகுதியிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட எஃகுவை கொடையாக கொடுத்தான் என்கிறது வரலாறு. எனவே, எஃகும், வார்ப்பு இரும்பு பொருட்களும் பழந்தமிழர் காலத்திலேயே இங்கு உற்பத்தி செய்யப்பட்டன என்பதற்கு இப்போது கிடைத்துள்ள பொருட்கள் ஆதாரமாக அமைந்துள்ளன” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT