Published : 14 Dec 2014 10:21 AM
Last Updated : 14 Dec 2014 10:21 AM

வழக்குகளை விரைவில் முடிக்க நாடு முழுவதும் நடமாடும் சமரச மையம்: உச்ச நீதிமன்ற நீதிபதி வேண்டுகோள்

வழக்குகளை விரைந்து முடிக்க நாடு முழுவதும் நடமாடும் சமரச மையம் தொடங்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா யோசனை கூறியுள்ளார்.

வழக்குகளுக்கு சமரச முறை யில் தீர்வு காண்பது தொடர்பான தென்மண்டல மாநாடு சென்னை யில் நேற்று நடைபெற்றது. உச்ச நீதிமன்ற நீதிபதி எப்.எம்.இப்ராஹிம் கலிபுல்லா இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசியதாவது:

நமது சட்டமுறையில் உட்கட் டமைப்பு வசதிகள் குறைவாக உள்ளது. இந்தியாவில் 1 கோடி மக்களுக்கு 8 நீதிபதிகள் உள்ளனர். மேற்கத்திய நாடுகளில் 10 லட்சம் மக்களுக்கு 50 நீதிபதிகள் உள்ளனர். இந்த நிலையிலும்கூட, ஒரு பிரச்சினை என்றால் நீதிமன்றத்தைத்தான் அணுக வேண்டும் என்று மக்கள் எண்ணுகின்றனர். அது இயல்பான ஒன்றாகிவிட்டது.

உட்கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருக்கும் நிலை யில், வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பிரச்சினை களின் தீர்வுக்கு நீதிமன்றத் தைத்தான் அணுக வேண்டும் என்பதே நடைமுறை. அதைத்தவிர யாரும் கட்டப்பஞ்சாயத்தை நாடிச் செல்லக்கூடாது. அதை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். கட்டப் பஞ்சாயத்தை அகற்றும் வகையில், நீதிமன்றத்தில் அதிக எண்ணிக்கையில் வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதை நாங்கள் வரவேற்கிறோம்.

தகவல் தொடர்பு மற்றும் வங்கிச் சேவைகளில் புகுத்தப்பட்டுள்ள நவீன தொழில்நுட்பம் மக்களுக்கு உடனுக்குடன் சேவை புரிவதில் பெரிதும் பயன்படுகிறது. அந்த அளவு தொழில்நுட்பத்தை நீதித்துறையில் புகுத்த தாமதம் ஏற்படுகிறது.

சமரச தீர்வு முறையால் இரண்டு தரப்பினருமே சமாதானம் அடைகிறார்கள் என்பது ஒரு முக்கிய அம்சமாகும். மற்ற தீர்வுமுறையைவிட சமரச முறைக்கு செலவு குறைவானது. ஒரு கோடி மக்களுக்கான 8 நீதிபதிகளும், நீதி வழங்குவதில் திறம்பட செயல்பட்டாலும்கூட, நாடு முழுவதும் நிலுவையில் உள்ள 2.68 கோடி வழக்குகளை முடிக்க 300 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். எனவே, சமரசம் மூலம் வழக்குகளை முடித்துக் கொள்ள மக்கள் முன்வர வேண்டும்.

நான் ஜம்மு காஷ்மீரில் தலைமை நீதிபதியாக இருந்த போது, அங்கு சட்டப்பணிகள் ஆணையம் நடமாடும் சமரச மையத்தை நடத்தியது. அதுபோல, அந்தந்த மாநில சட்டப்பணிகள் ஆணையமும், சமரச மையமும் இணைந்து நாடு முழுவதும் நடமாடும் சமரச மையத்தை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல் தலைவரும், உயர் நீதிமன்ற நீதிபதியுமான சதீஷ் அக்னிகோத்ரி, ஆந்திரம், தெலங்கான உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கல்யாண் ஜோதி சென்குப்தா உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x