Published : 22 Dec 2014 01:20 PM
Last Updated : 22 Dec 2014 01:20 PM
படகு பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை கடலோர காவல்படையினர் மீட்டு புதுச்சேரி கொண்டு வந்தனர்.
சென்னை காசிமேட்டை சேர்ந்த ஐயப்பன் (34), நந்தா (35), சங்கர்(38), சிவா (31), பார்வதி, சீனி, கிருஷ்ணா(26) ஆகியோர் புகழேந்தி (40) என்பவருக்கு சொந்தமான படகில் கடந்த 11-ம் தேதி காசிமேடு துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். 7 நாட்டிக்கல் மைல் தொலைவு வரை சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 19-ம் தேதி கடலின் சீற்றம் அதிமாக இருந்த காரணத்தால் படகின் இன்ஜின் பழுதாகி நடுக்கடலில் நின்றது. இதனால் மீனவர்கள் கரை திரும்ப முடியாமல் 2 நாட்கள் நடுக்கடலில் தத்தளித்தனர். காற்றின் வேகத்தில் படகு புதுச்சேரி அடுத்த காலாப்பட்டு பகுதிக்கு வந்தது.
இது குறித்து சென்னை கடலோரக் காவல் குழுமத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீஸார் மீனவர்கள் உதவியுடன் கடலுக்குள் சென்று நடுக்கடலில் தத்தளித்த 7 மீனவர்கள் மற்றும் படகை மீட்டு நேற்று காலை மீட்டு புதுச்சேரி உப்பளம் துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர்.
இதில் சிவா, பார்வதி ஆகியோர் ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், சீனி, கிருஷ்ணா ஆகியோர் ஓங்கோல் பகுதியைச் சேர்ந்தவரகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதே போல், சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த சுப்ரமணி, திருஞானசம்பந்தம் (54), இளங்கோ. ராஜா (40), முருகானந்தம் (35), தன்ராஜ் (43), விஜய் (33), பழவேசன் (41), ஆனந்த் (34), பிச்சை (35), முருகன் (34), ராஜா ஆகியோர் இரு படகுகளில் கடந்த 18-ம் தேதி மீன்பிடிக்க ஆழ்கடல் பகுதிக்கு சென்றனர். இந்நிலையில் இரு படகுகளும் நேற்று முன்தினம் திடீரென பழுதாகி நடுக்கடலில் நின்றன.
காற்றின் வேகத்தில் 2 படகுகளும் புதுச்சேரி கடல் பகுதிக்கு வந்தன. படகு பழுதாகி மீனவர்கள் நடுக்கடலில் தத்தளிப்பது குறித்து கடலோர காவல் படைக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் புதுச்சேரி கடலோரக் காவல் படை பிரிவு போலீஸார் நடுக்கடலில் தத்தளித்த 12 மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT