Published : 14 Apr 2014 10:32 AM
Last Updated : 14 Apr 2014 10:32 AM

வடிவேலுவுக்கு வைக்கப்பட்டுள்ள வெடி நாளை நமக்கும் வெடிக்கும்: ‘தெனாலிராமன்’ தொடர்பாக பாரதிராஜா அறிக்கை

வடிவேலுவுக்கு வைக்கப்பட்டுள்ள வெடி நாளை நமக்கும் வெடிக்கும். எனவே திரை உலகினர் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து ‘தெனாலிராமன்’ பட விவகாரத்தில் நல்ல தீர்வு காணவேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ஞாயிறன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பெரும் தலைவர்களை கேலிச்சித்திரம் வரைகிறார்கள். மிகப்பெரிய சர்வாதிகாரி ஹிட்லரை கிண்டல் செய்து படம் எடுத்தார் மகாகலைஞர் சார்லிசாப்ளின். கலைஞர்களுக்கு படைப்பு சுதந்திரம் உண்டு.

ஒரு திரைப்படம் மக்கள் பார்க்க தகுதியானது என்று மத்திய அரசின் பிரதிநிதி சான்றிதழ் வழங்கியபிறகு எங்களிடமும் திரைப்படத்தை காட்டி சான்றிதழ் வாங்க வேண்டும் என்றால் அப்படி கேட்பவர்கள் என்ன மற்றுமொரு மத்திய அரசா? அதிகார மையமா? தணிக்கை செய்யப்பட்ட திரைப்படம் உங்கள் கருத்துக்கு முரண்பாடாக இருந்தால் அதை நீங்கள் தணிக்கை குழுவிடம்தான் கேட்க வேண்டும்.

சமீபகாலமாக திரை உலகை நோக்கி திரும்பிய இந்த எதிர்ப்புகள் மதம் சார்ந்தா? இனம் சார்ந்தா? மொழி சார்ந்தா? எதை சார்ந்து வருகின்றன என புரியவில்லை.

தமிழ் திரை உலகில் பல்வேறு அமைப்புகள் இருந்தும் ஒற்றுமை இல்லாமல் சிதறி இருப்பதால் தடி எடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரர்கள் ஆகிவிடுகிறார்கள். தமிழ் திரைப்பட கலைஞர்கள் எல்லோரும் சேர்ந்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. இன்று தமிழன் வடிவேலுவுக்கு வைக்கப்பட்டுள்ள வெடி நாளை நமக்கும் வெடிக்கும். திரைஉலகினர் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து இதற்கு நல்ல தீர்வு காணவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இது தொடர்பாக ‘தி இந்து’ அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டது. “தெனாலிராமன் படத்தை எதிர்க்கக்கூடாது என்கிறீர்கள். ஆனால், ‘இனம்’ படத்தையும் ஒரு படைப்பாளிதான் எடுத்தார். அந்த படம் வந்தபோது, தமிழகத்தில் சிலர் எதிர்த்தார்கள். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?” என்று கேட்டோம்.

இதற்கு பதிலளித்த பாரதிராஜா, “நான் ‘இனம்’ படத்தை இன்னும் பார்க்கவில்லை. கேள்விப்பட்டவரை, அங்குள்ள போராளியை ஒரு தீவிரவாதி போல் காட்டியிருப்பதாக கேள்விப் பட்டேன். சமூகம் சார்ந்த விஷயத்தை, மிகைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்த படத்தை, இந்த மண்ணில் பிறந்த ஒரு தமிழன் எடுத்திருந்தால், படம் வேறுமாதிரி வந்திருக்கும். படத்தை எடுத்த படைப்பாளி தமிழ் ரத்தத்துக்கு சொந்தமில்லாதவர். அதனால், சமூகத்தினரின் கோபத்தின் வெளிப்பாடு என்பது ஒரு கடமைதான். இதே மாதிரி ‘மெட்ராஸ்கபே’ படம் வந்த போது, போராளிகளை கொச்சைப்படுத்தும் விதமாக இருந்ததால் எதிர்த்தேன்” என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x