Published : 20 Dec 2014 05:05 PM
Last Updated : 20 Dec 2014 05:05 PM
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை கிறிஸ்துமஸ் தினத்துக்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலவர் ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில், "கடந்த 16–ந் தேதி நான் உங்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக மனித நேய அடிப்படையில் சிறையில் இருக்கும் 30 இலங்கை மீனவர்கள் மற்றும் அவர்களது 19 படகுகளையும் வருகிற 22–ந் தேதி விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தேன்.
அதன் மூலம் அவர்கள் தங்கள் நாட்டுக்கு திரும்பி குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட முடியும். அதே நேரத்தில் இதற்கு மாற்றாக கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட வசதியாக இலங்கை சிறையில் வாடும் 66 தமிழக மீனவர்களையும், அவர்களது 81 படகுகளையும் விடுதலை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தேன்.
இதற்கிடையே மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்தில் இருந்து ஒரு கடிதம் எங்களுக்கு கிடைத்தது. இலங்கை சிறையில் உள்ள 66 தமிழக மீனவர்களை மட்டும் விடுவிக்க இலங்கை அரசு ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் படகுகள் விடுவிப்பது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. கடந்த ஜூன் மாதம் முதல் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார்.
மீனவர்களின் படகுகள் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்படாமல் இருக்க உடனடியாக அவற்றை விடுவிக்க வேண்டுகோள் விடுத்தார். தற்போது இலங்கை அரசு படகுகளை விடுவிக்க விரும்பாதது ஏமாற்றம் அளிக்கிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தமிழக அரசு பெருந்தன்மையுடன் 30 இலங்கை மீனவர்களை வருகிற 22–ந் தேதி விடுதலை செய்கிறது. அதே நேரத்தில் இலங்கை சிறையில் உள்ள 66 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்வதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT