Published : 10 Dec 2014 10:00 AM
Last Updated : 10 Dec 2014 10:00 AM

குற்ற விசாரணை நடைமுறை சட்டத்தை எதிர்த்து விஜயகாந்த் மனு உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்படுமா? - உயர் நீதிமன்றத்தில் விசாரணை ஒத்திவைப்பு

குற்ற விசாரணை நடைமுறை சட்டப் பிரிவை எதிர்த்து தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதி மன்றத்துக்கு மாற்ற வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் கோரப் பட்டது. இதன் மீதான விசார ணையை பிப்ரவரி 17-ம் தேதிக்கு தள்ளிவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, நிர்வாகிகள் பி.பார்த்தசாரதி, எல்.வெங்கடேசன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுக்களில் கூறியிருப்பதாவது:

தமிழக முதல்வரை விமர்சனம் செய்து பேசியதற்காக, முதல்வர் சார்பில் அரசு வழக்கறிஞர்கள் எங்கள் மீது பல்வேறு மாவட்ட நீதி மன்றங்களில் அவதூறு வழக்குகள் தொடர்ந்துள்ளனர். முதல்வர் மற்றும் அரசின் உயர் பதவி வகிப்பவர்கள், இது போன்ற அவதூறு வழக்குகள் தொடரும்போது, அவர்களே நீதிமன்றத்துக்கு நேரில் வந்து வழக்கு தொடர வேண்டும்.

ஆனால், குற்ற விசாரணை நடை முறைச் சட்டம் (சிஆர்பிசி) பிரிவு 199(2) மற்றும் (4), முதல்வர் உள்ளிட்ட உயர் பதவி வகிப்பவர்கள் சார்பில் அரசு வழக்கறிஞர்களே வழக்கு தொடர அனுமதிக்கிறது. எனவே, இப்பிரிவு சட்டவிரோதமானது, தன்னிச்சையானது என்று அறி வித்து அதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தனர்.

இதற்கு பதிலளித்து மத்திய அரசின் உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘முதல்வர், அமைச்சர் உள்ளிட்டோர் சார்பில் அரசு வழக்கறிஞர்களே அவதூறு வழக்குகள் தாக்கல் செய்ய குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் வழிவகை செய்கிறது. இதில் எந்த தவறோ, விதிமீறல்களோ இல்லை. எனவே, இந்த மனுக்களை தள்ளு படி செய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் இந்த மனுக்களை நேற்று விசாரித் தனர். மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன், வழக்கறிஞர் வி.டி.பாலாஜி ஆகியோர் வாதாடும் போது, ‘‘குற்றவியல் அவதூறு சட்டப் பிரிவுகளை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே ஒரு வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. எனவே, இந்த வழக்கிலும் உச்ச நீதிமன்றத்தி லேயே தீர்வுகாண விரும்புகிறோம். அதற்கு அனுமதிக்க வேண்டும்’’ என்றனர்.

இதையடுத்து, இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றுவது குறித்து உத்தரவு பிறப்பிப் பதற்காக விசாரணையை பிப்ரவரி 17-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x