Published : 30 Dec 2014 10:29 AM
Last Updated : 30 Dec 2014 10:29 AM
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக தமிழகம் முழுவதும் அரசு விரைவு பஸ்களின் இயக்கம் கணிசமாக குறைந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆம்னி பஸ்கள் அதிகளவில் இயக்கப்படுகின்றன.
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, தஞ்சாவூர், நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு சுமார் 1,500 விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து மட்டுமே நாள்தோறும் 450-க்கும் அதிகமான பஸ்கள் இயக்கப்படுகின்றன. மற்ற போக்குவரத்துக் கழகங்கள் சார்பிலும் சேலம், திருச்சி, தருமபுரி, கும்பகோணம், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு நூற்றுக்கணக்கான பஸ்கள் இயக்கப்படுகின்றன.
கிறிஸ்துமஸ் விடுமுறையை யொட்டி சென்னையில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த ஊருக்கு சென்றனர். விடுமுறை முடிந்து எல்லோரும் நேற்று முன்தினம் மாலை முதல் சென்னை திரும்பத் தொடங்கினர். ஆனால், கடந்த 2 நாட்களாக அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு மிகக் குறைவான பஸ்களே இயக்கப்பட்டு வருகிறது.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பண்டிகை காலத்தில் இயக்குவதுபோல், பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு அதிகளவில் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டன. அதே நேரத்தில் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்ததாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக சந்துரு, பாக்கியராஜ் ஆகியோர் கூறும்போது, ‘‘ஞாயிற்றுக்கிழமை இரவு திருச்சியில் இருந்து சென்னை புறப்பட்டோம். பஸ் நிலையத்தில் 2 மணி நேரம் காத்திருந்தும் அரசு விரைவு பஸ்கள் வரவில்லை. இதையடுத்து, தனியார் பஸ்ஸில் பயணம் செய்தோம். வழக்கமாக திருச்சி – சென்னைக்கு ரூ.500 கட்டணம் வசூலிப்பர். ஆனால், தற்போது ரூ.650 வரை கட்டணம் வசூலித்தனர்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT