Published : 29 Dec 2014 11:14 AM
Last Updated : 29 Dec 2014 11:14 AM
வாழை விளைச்சல் அதிகரித்துள்ளதால் முதல்முறையாக வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தேனி மாவட்ட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தேனி மாவட்டம் சின்னமனூர், கம்பம், உத்தமபாளையம், வீரபாண்டி, தேவதானப்பட்டி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பச்சை வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இப்பகுதியில் விளையும் வாழைகள் லாரிகள் மூலம் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
மேலும் கப்பல் மூலம் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கும் இவை அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தேனி மாவட்டத்தில் வீசிய பலத்த சூறாவளி காரணமாக பல நூறு ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழைத் தோட்டங்கள் சேதம் அடைந்தன. இதனால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் உள்ளூர் மற்றும் வெளிமாவட்ட தேவை அதிகரிப்பு காரணமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை.
தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளதால் வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டத் தேவை போக ஈரான், இராக், கத்தார் போன்ற வளைகுடா நாடுகளுக்கு முதல்முறையாக ஏற்றுமதி செய்ய தேனி மாவட்ட விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து வாழை விவசாயி சின்னச்சாமி கூறியபோது, ‘‘பச்சை வாழைத்தாரில் சராசரியாக 14 முதல் 18 சீப்புகள் வரை கிடைக்கும். ஆனால் இந்த ஆண்டில் இயற்கை சீற்றங்கள், நோய் தாக்குதல் எதுவும் இன்றி சில தோட்டங்களில் 6 அடி உயரத்துக்கு வாழைத்தார் வளர்ந்துள்ளது. இதில் 28 சீப்புகள் வரை உள்ளன. தரமான பழங்களை வளைகுடா பகுதி மக்கள் அதிகமாக விரும்புவதாலும் தற்போது வரத்து அதிகரித்துள்ள நிலையில் முதன்முறையாக வளைகுடா நாடுகளுக்கு அனுப்பும் முயற்சியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT