Published : 03 Dec 2014 10:55 AM
Last Updated : 03 Dec 2014 10:55 AM
இன்று டிசம்பர் 3: மாற்றுத்திறனாளிகள் தினம்
தன்னுடைய இரண்டு கைகளுக்கும் செருப்பு அணிந்துள்ள மாசிலாமணிக்கு 62 வயது. தவழ்ந்து கொண்டே மேடை ஏறுகிறார். வசீகரிக்கும் பேச்சால் பார்வையாளர்களிடம் தன்னம்பிக்கை விதையைத் தூவிச் செல்லும் அவர், ஜனாதிபதி விருது, கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற நாகர்கோவில்காரர்.
இளம்வயதில் இளம்பிள்ளை வாதத்தால் கால் செயல்பாட்டை இழந்த இவர் நம்மிடம் பேசியதாவது: ‘‘குளச்சல் பள்ளிக்கூடத்துக்கு 5 மைல் தவழ்ந்தே போவேன். நாகர்கோவில் பயோனியர் குமாரசுவாமி கல்லூரியில பி.ஏ. படிச்சேன். எம்.ஏ. முடிச்சப் பிறகு மாற்றுத்திறனாளின்னு யாரும் வேலை தரலை.
என் இலக்கியத் திறன், பேச்சாற்றலை அடிப்படையா வெச்சிட்டு, இந்தியன் வங்கியில் 1976- ல் காசாளர் வேலை கிடைச்சுது. ஓய்வு பெறும் வரை நாகர்கோவில் கிளையில வேலை. 2 மகள்கள்.
திருமணம் செய்துகொடுத்தாச்சு. பேச்சுக் கலையை அனைவருக்கும் கொண்டு சேர்க்கிற ஆர்வத் துல நண்பர்களோட சேர்ந்து `வீரமாமுனிவர் பேச்சாளர் பேரவை’யைத் தொடங்கி நடத்தி வர்றேன்.
இந்த அமைப்பு மூலம் மாணவர்களுக்கு பேச்சுக் கலை, தட்டச்சு, கணினி பயிற்சி இலவசமா தர்றோம்’’ என்றார். சிறந்த மாற்றுத்திறனாளிப் பணியாளருக்கான தேசிய விருதை 1989-ல் அப்போதைய ஜனாதிபதி வெங்கட்ராமனிடமும், 2009-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் கலைமாமணி விருதும், கமல்ஹாசனிடம் அன்னை ராஜலெட்சுமி விருதும் பெற்றுள்ளார். இப்போது தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் தன்னம்பிக்கை குறித்து பேசி வருகிறார் இந்த ‘மிஸ்டர்’ தன்னம்பிக்கை!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT