Published : 18 Dec 2014 10:12 AM
Last Updated : 18 Dec 2014 10:12 AM
இங்கிலாந்து நாட்டில் உள்ள கல்வி நிலையங்களில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்பில் சேருவதற்கான கல்வி உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்) கடந்த 2 ஆண்டுகளில் 750 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என, அந் நாட்டுக்கான துணைத் தூதர் தெரிவித்தார்.
இதுகுறித்து, சென்னையில் உள்ள பிரிட்டிஷ் துணை தூதர் பரத் ஜோஷி நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்தியா-இங்கிலாந்து நாடுகளுக்கிடையே பல்லாண்டு காலமாக நல்லுறவு நீடித்து வருகிறது. இரு நாடுகளிலும் பரஸ்பரம் தொழில் முதலீடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவில் இருந்து வர்த்தகம் மற்றும் தொழில் துறைக்காக செல்பவர்களுக்கு அளிக்கப்படும் வர்த்தக விசாவின் எண்ணிக்கை நடப்பாண்டில் 12 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே சமயம், சுற்றுலா, மருத்துவம் உள்ளிட்ட பிற தேவைகளுக்காக செல்வதற்கான விசாக்களின் எண்ணிக்கை 4 சதவீதம் குறைந்துள்ளது.
கல்வித் துறையிலும் இங்கி லாந்து நாட்டு கல்வி நிறுவனங்கள் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றன. பிரிட்டிஷ் கவுன்சில் மூலம், மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுத் திறனை அதிகரிப்பதற்கான வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், இங்கிலாந்தில் உள்ள கல்வி நிலையங்களில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்பில் சேருவதற்கான கல்வி உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்) கடந்த 2 ஆண்டுகளில் 750 பேருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில், 401 பேர் வரும் கல்வியாண்டில் சேர்க்கப்படுவர். இதற்காக 1.51 மில்லியன் பவுன்ட்ஸ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவர்களுக்கு இங்கிலாந்தில் உள்ள 57 கல்வி நிறுவனங்களில் பொறியியல், சட்டம், வர்த்தகம், கலை மற்றும் உயிரி அறிவியல் ஆகிய துறைகளில் கல்வி அளிக்கப்படும். மேலும், பிரிட்டிஷ் கவுன்சில் சார்பில் சென்னையில் வரும் பிப். 7-ம் தேதி மிகப் பெரிய கல்விக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 65 கல்வி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. பிப். 9-ம் தேதி பெங்களூருவிலும், பிப். 13-ம் தேதி கோவை மற்றும் கொச்சியிலும் கல்விக் கண்காட்சிகள் நடைபெறுகின்றன. இதில், மாணவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படும்.
இங்கிலாந்தைச் சேர்ந்த லைக்கா நிறுவனம் ஏற்கெனவே தமிழகத்தில் சினிமா துறையில் முதலீடு செய்துள்ளது. அடுத்த கட்டமாக, அந்நிறுவனம் சார்பில் உடல் பரிசோதனை மையம் சென்னையில் அமைக்கப்பட உள்ளது. இம்மையம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல் செயல்படத் தொடங்கும்.
இந்தியாவில் தொழில் துறையில் முதலீடு செய்வதில் பல நிர்வாக சவால்கள் உள்ளன. எனினும், பல பிரிட்டன் நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்கி சீரான வளர்ச்சியை அடைந்து வருகின்றன. இவ்வாறு பரத் ஜோஷி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT