Published : 28 Apr 2014 07:54 AM
Last Updated : 28 Apr 2014 07:54 AM

நாட்டுக்காக என் மகன் உயிர்த் தியாகம் செய்ததில் பெருமிதம் கொள்கிறேன்: மேஜர் முகுந்த் தந்தை பேட்டி

'நான் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக பல விஷயங்களை மறைத்து விடுவான், என்னுடைய மகன் என்னைக் குழந்தைபோல் பார்த்துக் கொண்டான்' என்று காஷ்மீர் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் தந்தை வரதராஜன் கண்ணீருடன் கூறினார்.

காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தீவிரவாதிகளைத் தேடும் பணியில் மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் இரு ராணுவ வீரர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் 2 ராணுவ வீரர்களும் 3 தீவிரவாதிகளும் இறந்தனர்.

இதில் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த ராணுவ வீரர், சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த முகுந்த் வரதராஜன் (31) ஆகியோர் உயிரிழந்தனர்.

மேஜர் முகுந்த் வரதராஜனின் சொந்த ஊர் ஆவடி அருகே உள்ள பருத்திப்பட்டு. சேலையூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி. காம். படித்து முடித்து, தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியில் இதழியல் துறையில் முதுகலை படித்து முடித்தார்.

பின்னர், சென்னை ராணுவப் பள்ளியில் சேர்ந்து 2004-ம் ஆண்டு பயிற்சி முடித்து இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்து இருக்கிறார்.

தந்தை வரதராஜன் உருக்கம்

''முகுந்த் எப்போதும் வாழ்க்கை யில் குறிக்கோளுடன் இருந்தவன். சின்ன வயதில் இருந்தே தாய், தந்தைக்கு மரியாதை கொடுக்கும் பிள்ளை. என் மகனுக்குத் தாம்பரத்தில் ஒரு வீடு வாங்க வேண்டும் என்று ஆசை. சில நாள் முன்புதான் வீட்டுக்கான முதல் தவணைத் தொகையை கொடுத்துவிட்டு வந்தோம். வீடு பார்க்கும்போது, ‘அப்பா வீடு 3 படுக்கை அறைகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். நீங்களும் அம்மாவும் எப்பவும் எங்ககூடத்தான் இருக்க வேண்டும்’ என்று கூறுவான். ஆனா இப்ப அவனுடைய ஆசையை நிறை வேற்ற முடியாமல் போய்விட்டது.

சமீபத்தில் நண்பர்களுடன் ஸ்கூட்டர்ல போகும்போது விபத்தில் அவனுடைய நண்பருக்கு அடிபட்டுவிட்டது. ஆனால், நாங்கள் பயந்துவிடுவோம் என்று நினைத்து அதனை எங்களிடம் கூறவில்லை. என்னையும் அவங்க அம்மாவையும் முகுந்த் குழந்தை போல் பார்த்துக் கொள்வான். நாட்டுக்காக என் மகன் உயிர்த் தியாகம் செய்து இருப்பது பெருமையாக இருக்கிறது'' என்று மனதில் தைரியத்துடனும் கலங்கிய கண்களுடனும் வரதராஜன் கூறினார்.

நிஜமான ஹீரோ

தாம்பரத்தில் ஆட்டோ ஓட்டும் ராஜேந்திரன் கூறுகையில், “நாட்டிற்காக உயிர் தியாகம் செய்யும் வீரர்கள்தான் நிஜமான ஹீரோங்க. காலையில் பேப்பர்ல எங்க ஏரியால இருக்கிற ராணுவ வீரர் சண்டையில் இறந்து போயிட்டாருனு படிச்சேன், மனசே சரியில்லைங்க, ஏரியா முழுசா அவருடைய போஸ்டர்தான் ஒட்டி இருக்காங்க. பார்க்கும்போதே நல்லா இருக்கிறாரு, மக்களுக்காக உயிர் தியாகம் செய்த முகுந்த் வரதராஜன் தெய்வம் மாதிரிங்க” என்று கூறினார்.

வீடு அருகில் நட்பு

கிழக்கு தாம்பரத்தில் உள்ள பார்க் வியூ அடுக்குமாடி குடியிருப்பில் முகுந்த் வரதராஜனின் தந்தை வரதராஜன், அம்மா கீதா வசித்து வருகின்றனர். அங்கு வசிக்கும் கிரேஸ் பிரமிளா ராஜு என்பவர் கூறுகையில், “வரதராஜன் குடும்பத்தினர் மிகவும் அமைதியானவர்கள். முகுந்த் அவங்க அப்பாவுடன் சபரிமலை ஏறும்போது வரதராஜன் கீழே விழுந்து விடாமல் பாதுகாப்பதற்காக அவரின் பின் பக்கமாகவே போனாராம்” என்றார்.

முகுந்த் வரதராஜன் குடும்பத் தினர் குடியிருப்பு அருகில் உள்ள அனைவரின் நன்மதிப்பையும் பெற்றுள்ளனர் என்பது அவர்களுக்காகக் கண்ணீர் சிந்தும் சுற்றங்கள் மூலம் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x