Published : 31 Dec 2014 09:52 AM
Last Updated : 31 Dec 2014 09:52 AM

அரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை எழுத்துத் தேர்வு மூலம் நிரப்ப தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை எழுத்துத் தேர்வு மூலம் நிரப்ப வேண்டும் என்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கோவை சாமி (44) என்பவர், உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து 20 ஆண்டுகளுக்குமேல் ஆகிறது. இதுவரை எனக்கு ஒரு நேர்காணல் அழைப்புகூட வரவில்லை. அதனால், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் என்னை பணியில் அமர்த்துவதற்கு பரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கை கடந்த ஆகஸ்டில் விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி டி.ஹரிபரந்தாமன், ‘‘போக்கு வரத்துத் துறையில் போக்கு வரத்து, நிர்வாகம், தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் உள்ள பணியிடங்களை நேர்முகத் தேர்வு மூலம் மட்டுமே நிரப்பினால், அதில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளது.

அதனால், 10-ம் வகுப்புக்கு கீழான கல்வித் தகுதியுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு எழுத்துத் தேர்வு நடத்த வேண்டும். இத்தேர்வுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைம் (டிஎன்பிஎஸ்சி) மூலமோ, தனியார் ஏஜென்சி மூலமோ நடத்த வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து, அரசு போக்குவரத்துக் கழக பொதுமேலாளர் ஆல்பர்ட் தினகரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விடுமுறைகால நீதிமன்ற நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் கே.கல்யாணசுந்தரம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமையாஜி ஆஜராகி, ‘‘எழுத்துத் தேர்வு மட்டும் நடத்தினால், தகுதியான நபரின் உடல் தகுதியை நிர்ணயிக்க முடியாது. நேர்முகத் தேர்வில் மட்டுமே ஒருவரின் உடல் தகுதியை கணிக்க முடியும்’’ என்று தெரிவித்தார்.

இதையடுத்து, எழுத்துத் தேர்வு மூலம் மட்டுமே பணி நியமனம் செய்ய வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், இவ்வழக்கில் கோவை சாமி மற்றும் சென்னை, திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் 4 வாரத்தில் பதில் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x