Published : 22 Dec 2014 10:52 AM
Last Updated : 22 Dec 2014 10:52 AM
ராமேசுவரம் பழம்பெருமை வாய்ந்த தனுஷ் கோடி துறைமுகம் புயலில் அழிந்து டிசம்பர் 22-ம் தேதி 50 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இந்நிலையில் தனுஷ்கோடியை யுனெஸ்கோ உலக பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்குமாறு கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.
பண்டைக்காலம் தொட்டு தனுஷ்கோடி, தமிழகத்தின் பிரதான துறைமுகமாக விளங்கியது. மார்க்கோபோலோ போன்ற உலக புகழ்பெற்ற வரலாற்றுப் பயணிகள் தங்கள் பயணக்குறிப்புகளில் தனுஷ்கோடி கடற்பகுதியில் நடை பெற்ற முத்துக்குளித்தலை பற்றி பெருமையாக எழுதியுள்ளனர். தனுஷ்கோடியில் இருந்து தலை மன்னார், யாழ்ப்பாணம், கொழும் புக்கு தினசரி படகு போக்குவரத்துகள் 20-ம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் நடைபெற்றுவந்தன.
கப்பல், ரயில் போக்குவரத்து
பின்னர் ஆங்கிலேயர் சென்னை யில் இருந்து தனுஷ்கோடிக்கு ரயில் போக்குவரத்து- தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்து, தலைமன்னாரில் இருந்து மீண்டும் கொழும்புக்கு ரயில் போக்குவரத்து திட்டத்தை உருவாக்கினர்.
மன்னார் மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டு 1914 பிப்ரவரி 24-ம் தேதி போட் மெயில் ரயில் தனது முதல் பயணத்தை தொடங்கியது. தனுஷ்கோடிக்கும் தலைமன்னா ருக்கும் கப்பல் போக்குவரத்து தொடங்கிய பொன்விழா ஆண்டான 1964 டிசம்பர் 17-ல் புயல் சின்னம் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவானது. டிசம்பர் 19-ல் அது புயலாக உருவெடுத்து டிசம்பர் 22-ல் இலங்கையை கடந்து 280 கி.மீ. வேகத்தில் இரவு 11 மணிக்கு மேல் தனுஷ்கோடிக்குள் புகுந்தது.
அனைவரும் இறந்த சோகம்
புயலுக்கு முன்னர் ராமேசுவரத் தில் இருந்து தனுஷ்கோடிக்கு புறப்பட்டுச்சென்ற போட் மெயில் ரயிலில் புயல் மிச்சம் வைத்தது வெறும் இன்ஜினின் இரும்பு சக்கரங்களை மட்டுமே. மற்றவை அனைத்தையும் புயல் கடலுக்குள் இழுத்துச் சென்றது. இந்த ரயிலில் பயணம் செய்த அனைவரும் புயலுக்கு பலியாயினர். தனுஷ் கோடியில் வசித்த ஆயிரக்கணக் கான மக்களும் உயிரிழந்தனர்.
தனுஷ்கோடி துறைமுகம், படகுத்துறை, ரயில் நிலையம், அஞ்சல் நிலையம், சுங்கத் துறை அலுவலகம், மருத்துவமனை, மாரியம்மன் கோயில், தேவாலயம், இஸ்லாமியர்கள் அடக்கஸ்தலம், பள்ளிக்கூடம் உள்ளிட்ட பெரிய கட்டிடங்கள் அனைத்தும் புயலின் தாண்டவத்தில் முற்றிலும் அழிந்துபோயின. புயல் தாக்கி 50 ஆண்டுகள் ஆன நிலையிலும்கூட தனுஷ்கோடி புயல் அழிவுகள் குறித்து நம் அரசிடம் இன்றுவரை சரியான புள்ளிவிவரங்கள் கிடையாது.
கடலை மட்டும் நம்பியுள்ளோம்
தனுஷ்கோடியிலேயே பிறந்து வளர்ந்த குமார் (30) கூறியதாவது:
எங்கள எத்தனையோ பத்திரிகையாளர்கள் வந்து பார்த்தாங்க. புயல் அடித்த கதையே சொல்லி சொல்லி அலுத்துப்போச்சு. இந்த மண்ணைவிட்டுப் பிரிய மனசில்லாமல் தனுஷ்கோடியைச் சுத்தி ஆயிரத்துக்கும் மேல மீனவர்கள் கடலை மட்டுமே நம்பி வாழ்கிறோம்.
அரசாங்கம் தனுஷ்கோடியை மக்கள் வாழத் தகுதியற்ற ஊருன்னு அறிவிச்சதால 50 ஆண்டுகளாக எங்களுக்கு எந்த அடிப்படை வசதிகளையும் செய்து தரல. ஆனா எங்க குழந்தைகள் படிக்க 8-ம் வகுப்பு வரையிலும் அரசு பள்ளி மட்டும் இருக்கு. இப்ப ராமேசுவரம் முகுந்தராயர் சத்திரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு ரோடு போடுறாங்க. 50 ஆண்டுகளுக்கு அப்புறம் லேசா எங்களுக்கு அரசாங்கம் மேல நம்பிக்கை வந்திருக்கு.
இவ்வாறு அவர் கூறினார்.
அடிப்படை வசதிகள் தேவை
தனுஷ்கோடி குறித்து ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜவாஹிருல்லா கூறியது:
ஒரு புயலால் பாதிக்கப்பட் டதாலேயே வாழத் தகுதி இல்லாத ஊர் தனுஷ்கோடி என அறிவித்த அரசு, இங்கு வாழும் பாரம்பரிய மீனவ மக்களுக்கு மருத்துவம், மின்சாரம், சாலை, குடிநீர் உள்ளிட்ட எவ்விதமான அடிப்படை வசதிகளையும் இதுவரையிலும் செய்துதராமல் இருந்தது.
ஆனால் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் சாலை அமைக்கும் பணியை தொடங்கியுள்ள அரசு, மேலும் தனுஷ் கோடியில் வாழும் பாரம்பரிய மீனவ மக்களுக்கு மருத்துவம், மின்சாரம், சாலை, குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் ஒரு படகுத்துறையும் செய்து தருவதுடன் தனுஷ் கோடியை யுனெஸ்கோ பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்கவும் மத்திய, மாநில அரசுகள் முயற்சி எடுக்க வேண்டும். இதனால் தனுஷ்கோடி மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்க்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT