Published : 10 Dec 2014 09:32 AM
Last Updated : 10 Dec 2014 09:32 AM

சென்னை விமான நிலையத்தில் 13 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது: ரூ.5 கோடி மதிப்புடையது

சென்னைக்கு விமானம் மூலம் கடத்திவரப்பட்ட 13 கிலோ தங்கம் பிடிபட்டது.

சிங்கப்பூரிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத் துறையினர் சோதனை செய்து வெளியே அனுப்பிக்கொண்டிருந்தனர். அப்போது சுற்றுலா விசாவில் சிங்கப்பூர் சென்று திரும்பிய ராமநாதபுரம் தொண்டியை சேர்ந்த ரியாஸ் முகமது (40) என்பவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் வைத்து இருந்த சூட்கேஸை திறந்து பார்த்தனர். சூட்கேஸின் உள்ளே இருபுறமும் ரகசிய அறைகள் இருந்தன. அதனை உடைத்து பார்த்தபோது கருப்பு நிற பெயின்ட் அடிக்கப்பட்ட 6.5 கிலோ தங்கக் கட்டிகள் இருந்தன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்து, கடத்தல் கும்பலுடன் அவருக்கு தொடர்பு இருக்கிறதா என விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் சென்னை விமான நிலையத்தின் பயணிகள் வருகை பகுதியில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் ஒரு கருப்பு நிற பிளாஸ்டிக் பை கேட்பாரற்றுக் கிடந்தது. இந்த பை குறித்து ஒலி பெருக்கி மூலம் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், பைக்கு உரிமைகோரி யாரும் வரவில்லை. இதையடுத்து பையை மோப்ப நாய் உதவியுடன் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பின்னர் திறந்து பார்த்தபோது, அதில் 6.5 கிலோ தங்கக் கட்டிகள் இருந்தன. தங்கக் கட்டிகளை யார் கொண்டு வந்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கத்தை வைத்துவிட்டு சென்றது யார் என்பதை கண்டு பிடிக்க, கண்காணிப்பு கேமரா வில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள் ளனர்.

சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள 13 கிலோ தங்கம் ஒரே நாளில் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, மும்பைக்கு அடுத்தபடியாக சென்னை விமான நிலையத்துக்கு அதிக அளவில் தங்கம் கடத்திவரப் படுகிறது. இறக்குமதி வரி உயர்வே, தங்கக் கடத்தல் அதிகரிக்க முக்கிய காரணம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x