Published : 25 Apr 2014 08:55 AM
Last Updated : 25 Apr 2014 08:55 AM

தேர்தல் நாளில் மின் துறை அபார சாதனை: அதிகபட்ச மின் விநியோகம்

தமிழகத்தில் தேர்தல் நாளன்று இதுவரை இல்லாத அளவுக்கு, 289 மில்லியன் யூனிட்கள் மின்சாரத்தை விநியோகம் செய்து தமிழக மின் துறை புதிய சாதனை படைத்துள்ளது. எப்போதும் இல்லாத வகையில் அனைத்து மின் நிலையங்களும் ஒரே நேரத்தில் பழுதின்றி இயங்கியதும், மின் துறையினருக்கு நிம்மதியை அளித்தது.

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் கட்சிகள் மின் வெட்டு பிரச்சினையை முக்கிய பிரச்சார ஆயுதமாக பயன்படுத்தின. இந்நிலையில் கடந்த ஒரு வாரகாலமாக மின் உற்பத்தி அதிகரித்து, மின் வெட்டு நேரம் குறைந்ததால், மக்களும், ஆளுங்கட்சியினரும் ஓரளவு நிம்மதியடைந்தனர். வாக்குப்பதிவு நாளில், தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டுமென்று, மின் வாரியத்துக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியது.

இதைத் தொடர்ந்து, மின் உற்பத்தியை அதிகரிக்கவும், பழுதான நிலையங்களை போர்க் கால அடிப்படையில் இயக்கவும் மின் துறை அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். தேர்தல் நாளில் மின் தடை இல்லாமல் இருக்க, விடுமுறையின்றி பணியாற்றுமாறு, மின் துறையினருக்கு உத்தரவிடப்பட்டது.

இதன் பலனாக, தேர்தல் நாளன்று மின்சார தட்டுப்பாடு பெருமளவு குறைக்கப்பட்டு, அதிக அளவுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டது. வியாழக்கிழமை பகல் நிலவரப்படி, 24 மணி நேரத்தில், 28 கோடியே 95 லட்சத்து 41 ஆயிரம் (289.54 மில்லியன்) யூனிட் மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டது.

காற்றாலை மின் உற்பத்தியில் பெரிய முன்னேற்றம் ஏற்படாவிட் டாலும், அனல் மின் நிலையங்களில், அதிக பட்சமாக (3540 மெகாவாட்) 85.14 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தியானது. மத்திய மின் நிலையங்கள் மூலம் 71.45 மில்லியன் யூனிட் மின்சாரம் தமிழகத்துக்கு விநியோகிக்கப்பட்டது. தனியார் மின் நிலையங்கள் மூலம் 26.11 மில்லியன் யூனிட்டும், வெளி மாநிலங்களில் வாங்கப்பட்ட மின்சாரம் மூலம் 24.88 மில்லியன் யூனிட்டும் மின்சாரம் விநியோகிக்கப்பட்டது. காற்றாலைகளில் 3.2 மில்லியன் யூனிட் மின்சாரம் மட்டுமே உற்பத்தியானது.

வடசென்னை, தூத்துக்குடி, எண்ணூர், வடசென்னை விரிவாக்கம், மேட்டூர், மேட்டூர் விரிவாக்கம் என அனைத்து மின் நிலையங்களும் கோளாறின்றி செயல்பட்டதால், மின்சார பயன்பாடுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரு சில இடங்களில் அந்தந்த துணை மின் நிலையங்கள், டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் தெருக்களின் மின் இணைப்புப் பெட்டியில் ஏற்பட்ட பிரச்சினை களால், சில இடங்களில் மின் தடை ஏற்பட்டது என்றும், மின் உற்பத்தியில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x