Published : 20 Dec 2014 10:33 AM
Last Updated : 20 Dec 2014 10:33 AM
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி பொதுமக்கள் மூலம் அரசுக்கு 1 லட்சம் மனுக்களை அனுப்ப, மாணவர்கள் இளை ஞர்கள் சமூக இயக்கம் திட்டமிட் டுள்ளது. இதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவுடன் கூடிய துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து இத்திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து மதுக் கடைகளையும் மூடி முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி மாணவர்கள், இளைஞர்கள் சமூக இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று துண்டுப் பிரசுரம் விநியோகிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது மதுவை ஒழிக்க வேண்டியதன் அவசியம் குறித்து மாணவர்கள் இளைஞர்கள் சமூக இயக்க செயலாளர் மகேந்திரன் கூறியதாவது: மதுவின் பிடியில் சிக்கி சீரழிந்து வரும் தமிழக மக்களுக்கு சிறிதளவாவது நிவாரணம் அளிக்கும் நோக்கில், புதிய மதுபானக் கடைகளைத் திறக்கக்கூடாது, மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மதுக்கடைகள் திறந்திருக்க வேண்டும். வாரத்தில் ஒருநாள் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். பார்களை உடனடியாக மூட வேண்டும்.
அரசு இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இப் பிரசாரத்தை தொடங்கியுள்ளோம். மதுவிலக்கை வலியுறுத்தி துண்டுப் பிரசுரம் விநியோகிக்கும் எங்கள் திட்டம் இன்று இங்கு தொடங்கி மாநிலம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும்.
நாங்கள் விநியோகிக்கும் துண்டுப் பிரசுரத்தின் ஒரு பக்கத்தில் மதுவின் தீமை பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. மற்றொரு பக்கத்தில் 10 அம்ச கோரிக்கைகளுடன் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரும் மனு உள்ளது.
அதில், பொதுமக்கள் தங்கள் முகவரியை எழுதி, அரசு தலைமைச் செயலாளருக்கு அனுப்புவார்கள். இவ்வாறு 1 லட்சம் மனுக்களை அனுப்ப திட்டமிட்டுள்ளோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT